Published : 25 Apr 2015 10:55 AM
Last Updated : 25 Apr 2015 10:55 AM

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குற்றவாளிகள் போல நடத்தக் கூடாது: குறைதீர் கூட்டத்தில் முறையீடு

போராட்டங்களில் ஈடுபடும் விவசாயிகளை குற்றவாளிகள் போல நடத்தக் கூடாது என்று திருச்சியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவ.சூரியன்:

விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால், போலீஸார் போராட்டங்களை முடக்கும் வகையில் செயல்படுகின்றனர். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளை காவல் துறையினர் மதிப்பதில்லை. மறியல் போராட்டங்களின்போது கைது செய்யப்படும் விவசாயிகளுக்கு சரிவர உணவு வழங்குவதில்லை.

தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு:

மண்ணச்சநல்லூரில் ஏப்.15-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் எங்களைக் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் நாங்கள் உண்ணாவிரதம் இருந்ததால், ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தினர். இதை தட்டிக்கேட்டதற்கு “சிறைச்சாலை எங்களது ராஜ்யம், எதை வேண்டுமானாலும் செய்வோம்” எனக் கூறி சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். எனவே, ஜெயிலர் மற்றும் சிறைக் காவலர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

இதேபோல, ஜி.கே.முரளிதரன் (காங்கிரஸ் விவசாயப் பிரிவு), மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), பூ.விசுவநாதன் (ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்) மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், சிறைத் துறையினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களைச் சமாதானப் படுத்திய ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, “காவல் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசுகிறேன். நீதிமன்ற நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது. இனி இதுபோல நடக்கக் கூடாது என காவல் துறையினரிடம் அறிவுறுத்துகிறேன். போராட்டங்களின்போது காவல் துறையினர் நடந்து கொள்ளும்விதம் தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும். காவல் துறை மற்றும் விவசாயிகளிடையே சுமூகமான நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தில், “கடந்த 3 ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் வறட்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுடன், பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும். ஆழ்குழாய்க் கிணறுகள் வெட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை ரத்து செய்ய வேண்டும். துறையூரில் வெங்காயத்தை பொது ஏல முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் காந்திப்பித்தன், கவுண்டம்பட்டி சுப்பிரமணியன், ம.ப.சின்னதுரை, வீரசேகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x