Last Updated : 30 Apr, 2015 01:28 PM

 

Published : 30 Apr 2015 01:28 PM
Last Updated : 30 Apr 2015 01:28 PM

பஸ், ஆட்டோ பந்த்: புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பேருந்துகள், ஆட்டோ, டெம்போ மற்றும் அனத்து வகை லாரிகளும் ஓடவில்லை. 4 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மறியலில் ஈடுபட முயன்ற பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் இன்று வாகன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி அனைத்து தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் வாகன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லலை, 5000 ஆட்டோக்கள், 350 டெம்போக்கள், 1000க்கும் மேற்பட்ட அனைத்து வகையான லாரிகளும் இயக்கப்படவில்லை, தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றது.



தனியார் பேருந்துகள் மற்றும், புறநகர் பேருந்துகளும், டெம்போக்களும் இயக்கப்படாததால், ஜிப்மர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு செல்ல வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கிராமப்புறத்தில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் புதுச்சேரி நகர்பகுதிக்கு வந்த பொதுமக்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டாத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே மறைமலை அடிகள் சாலையில் வந்த தமிழ்நாடு அரசு பேருந்துகள் இரண்டும், தனியார் பேருந்து ஒன்றும், ஒரு லாரியின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கின. இதே போல் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 47 பேரை உருளையன்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து 11 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில், பல முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தத்தை உருவாக்கியுள்ளது.

அதில், அபராதத் தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, செல்போன் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ.5,000, தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு போன் றவற்றுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x