Last Updated : 23 Apr, 2015 08:29 AM

 

Published : 23 Apr 2015 08:29 AM
Last Updated : 23 Apr 2015 08:29 AM

சென்னையில் 250 இடங்களில் மின்சாரம் தாக்காத பில்லர் நிறுவும் பணி தொடக்கம்: பொதுக்கூட்டங்களுக்கு மின்சாரம் திருடமுடியாது

தமிழகத்தில் முதல் முறையாக, மின்சாரம் தாக்காத, மின்சிக்கனத்துக்கு உதவும் நவீன பில்லர்கள் (மின்சார பெட்டி) சென்னையில் நிறுவப்படுகிறது.

சென்னையில் மின்மாற்றிகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அதிக மின்தேவை உள்ள பகுதிகளில் ‘சிக்ஸ் வே’ மின்சாரபெட்டிகள் (பில்லர்) அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய மின்பெட்டிகள் தண்ணீர் பட்டால் துருப்பிடித்து சேதமடைந்துவிடுகின்றன. அதனால் மழைக்காலங்களிலோ, மின்கோளாறு ஏற்படும்போதோ, அவற்றின் மீது மனிதர்கள் தங்களை அறியாமல் தொட்டால் கூட மின்சாரம் தாக்குவதுண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் திறந்துகிடந்த மின்பெட்டியைத் தொட்ட ரோஷன் என்ற ஒரு வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, நடைபாதையில் இடத்தை அடைக்காத, பாதுகாப்பான நவீன மின்சார பெட்டிகளை மின்வாரியம் நிறுவத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக எரிசக்தித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தற்போது நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள சுமார் 40 ஆயிரம் பில்லர் பாக்ஸ்கள் பாதுகாப்பு குறைந்தவையாக உள்ளன. அவற்றால் மின்பணியாளர்களின் பாதுகாப்புக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வகை மின்சார பெட்டிகளை நிறுவுவதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மின்சார பெட்டிகளில், இருபக்கங்களில் கதவு உள்ளது. ஆனால் புதிய மின்சார பெட்டிகளில் ஒரு கதவு மட்டுமே உள்ளது. நடைபாதையிலோ, சாலைகளிலோ இதை அமைக்கும்போது, இடநெருக்கடி ஏற்படாது. முக்கியமாக, தற்போதுள்ள மின்சார பெட்டிகள், திறந்ததுமே அவற்றில் அனல் அடிப்பதை உணரமுடியும். அந்த வெப்பம் காரணமாகவும் மின்சாரம் அதிகம் செலவாகிறது. ஆனால், புதிய பெட்டிகளில் அவ்வாறு இருக்காது. மின் சிக்கனத்துக்கு உகந்தவை.

மின் பெட்டிகளில் ஊழியர்கள் பழுதுபார்க்கும்போது தப்பித் தவறி, அருகில் உள்ள உபகரணங் களில் கை பட்டுவிட்டால் மின்சாரம் தாக்கும். இதில் அந்த பிரச்சினை இல்லை. அனைத்து உபகரணங்களும் ‘இன்சுலேட்’ செய்யப்பட்டிருப்பதால் ஊழியர் களும் இதை விரும்புகின்றனர்.இவ்வகையிலான மின்பெட்டிகள், மும்பை மற்றும் கொல்கத்தாவில் அதிக அளவில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிரவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் உள்ளூர் விழாக்களுக்கு இவற்றில் இருந்து மின்சாரத்தை திருடுவது கடினம். மின்சாரத்தைத் திருடுவது இதில் சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சுமார் நான்கு இடங்களில் இத்தகைய பில்லர் பாக்ஸ்களை நிறுவி, கடந்த ஓராண்டாக சோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு விபத்து கூட நேரவில்லை. இதைத் தொடர்ந்து, 250 இடங்களில் இந்த எச்.ஆர்.சி. பில்லர்களை நிறுவும் பணி தொடங்கியுள்ளது. அதில், சுமார் 25 இடங்களில் அவை செயல்படத்தொடங்கிவிட்டன. சென்னையில் அனைத்து இடங்களிலும் இந்த புதிய மின்பெட்டியை நிறுவுவதற்கு அதிக நிதி தேவை. வழக்கமானவற்றை விட இவற்றின் விலை சற்று அதிகம் என்பதே காரணம். ஆனால், பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்பு, மின்சிக்கனம், குறைந்த இடத்தேவை போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டால் இது லாபகரமானதாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x