Published : 15 Apr 2015 09:50 AM
Last Updated : 15 Apr 2015 09:50 AM

கை, கால் வலுவிழந்த முதியவருக்கு பக்கவாத தடுப்பு அறுவை சிகிச்சை: அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்டது

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் கை, கால் வலுவிழந்த 70 வயது முதியவருக்கு பக்கவாத அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

சென்னை ரெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (70). கோயம்புத்தூர் பட்டு ஆலையில் இன்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லட்சுமி (65). வலது கை மற்றும் கால் வலுவிழந்த நிலையில் இருந்த ஜெயராமன், சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது, முதியவரின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந் தது. இதையடுத்து ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை டாக்டர்கள் எஸ்.ஆர்.சுப்ரமணியன், க.இளஞ்சேரலாதன், அசோக், சேரன், மயக்க மருந்து டாக்டர் திருமாறன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இப்போது ஜெயராமன் பூரணமாக குணமடைந்து நன்றாக நடக்கத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா, ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை டாக்டர்கள் எஸ்.ஆர்.சுப்ரமணியன், க.இளஞ்சேரலாதன், அசோக் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஜெயராமனுக்கு மூளைக்கு செல்லும் இடது ரத்தக் குழாயில் 90 சதவீதம் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், ரத்தம் தடைபட்டு வலது கை மற்றும் கால் வலுவிழந்துள்ளது. இதை குறைந்த அளவிலான பக்கவாதம் (Mini Stroke) எனலாம். இதனை அப்படியே விட்டிருந்தால் பக்கவாதம் ஏற்பட்டிருக்கும். இதனால் உடனடியாக பக்கவாத தடுப்பு அறுவை சிகிச்சை செய்து ரத்தக்குழாயில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடந்தது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும்.

இவருக்கு ஏற்கெனவே ஒருமுறை 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது மூளைக்கு செல்லும் வலது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இடது கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அடைப்பு நீக்கப்பட்டுள்ளது.

மது, புகை காரணம்

மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பால் 85 சதவீத பக்கவாதம் ஏற்படுகிறது. மீதமுள்ள 15 சதவீத பக்கவாதம் ரத்தக்கசிவால் வருகிறது. கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், மது மற்றும் புகைப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்தக்குழாய் அடைப்பு குறித்த பரிசோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x