Published : 05 Apr 2015 10:16 AM
Last Updated : 05 Apr 2015 10:16 AM

முகமூடி கும்பலால் வழிமறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை: கொலை வழக்கில் தொடர்புடையவர்

கும்பகோணம் அருகே சன்னாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம.க.ராஜா, முகமுடி அணிந்த மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாமக மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின். இவரது தம்பி ம.க.ராஜா(32). இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட ராஜா, நள்ளிரவில் நண்பர்களுடன் காரில் மருத்துவக்குடி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் ராஜா வந்த காரின் மீது மோதியது. இதையடுத்து காரை ஓட்டி வந்த பாலமுருகன், ராஜா இருவரும் காரிலிருந்து கீழே இறங்கியபோது, முகமுடி அணிந்த 4 நபர்கள் பாலமுருகனைத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த ராஜா அங்கிருந்து ஓடினார். அந்த கும்பல் ராஜாவை விரட்டிச் சென்று சன்னாபுரம் பகுதியில் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தது.

தகவலறிந்த திருவிடைமருதூர் போலீஸார், ராஜாவின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை சரக டிஜஜி சஞ்சய்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

பதற்றம்

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக்குடி, ஆடுதுறை, சன்னாபுரம் மற்றும் உடல் வைக்கப்பட்டிருந்த கும்பகோணம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நேற்று ராஜாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை வழக்கு குற்றவாளி

கடந்த 2013-ல் செல்வகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் உள்ள வழக்கில் ராஜா 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதேபோல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திருநீலக்குடி காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் சில வழக்குகளிலும் இவர் சேர்க்கப்பட்டிருந்தார் என போலீஸார் தெரிவிக்கின்ற னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x