Published : 09 Apr 2015 11:20 AM
Last Updated : 09 Apr 2015 11:20 AM
ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தை தனியார் மயமாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு பயணிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ரயில் ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ரயில் ஓட்டுநர்களுக்கான பயிற்சி மையங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் முகல்சராய், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மேற்கு வங்க மாநிலம் ஆசன்சோல், மகா ராஷ்டிர மாநிலம் குர்லா மற்றும் தமிழகத்தில் உள்ள ஆவடி ஆகிய 6 இடங்களில் உள்ளன.
இங்கு ஆண்டொன்றுக்கு 750 பேருக்கு ரயில் ஓட்டுவதற்கும், 350 பேருக்கு ரயில் இன்ஜின் பராமரிப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி 17 வாரங்களுக்கு நடைபெறும். ஆவடியில் உள்ள பயிற்சி மையம் 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சி ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 6 பயிற்சி மையங்களை தனியார் மயமாக்குவதற்காக மத்திய ரயில்வே ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இம்முடிவுக்கு ரயில் ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க இணை பொதுச் செயலாளர் கே.பார்த்தசாரதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ரயில் ஓட்டுநர் பணிக்கான ஆட்களை ரயில்வே தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்புடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இப்பயிற்சி மையத்தில் ரயில்களை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆவடியில் உள்ள பயிற்சி மையத்தில் ரயில் இன்ஜின் மாதிரி (சிமுலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரயில் இன்ஜின் கேபினுக்குள் அமர்ந்து எப்படி ரயில் இயக்கப்படுகிறதோ அத்தகைய முறையில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் இப்பயிற்சி மையங்களையும் தனியார் மயமாக் கப்போவதாக அறிவித்துள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் தனியாரை அனுமதிப்பது மிகவும் ஆபத்தாக அமையும். காரணம், ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தனியார்மயமாக்கினால் யார் வேண்டுமானாலும் பணம் கட்டி பயிற்சி பெறும் நிலை ஏற்படும். இதனால், சில சமூக விரோதிகள் பயிற்சியை பெற்றுக் கொண்டு ரயில்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் நிலை ஏற்படக்கூடும்.
உதாரணமாக, கடந்த 2009-ம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் மின்சார ரயிலை இயக்கிச் சென்று வியாசர்பாடி ரயில் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய நிலையில் இப்பயிற்சி மையம் தனியார்மயமாக்க வேண்டிய எவ்வித அவசியமும் எழவில்லை. எனவே, ரயில்வே அமைச்சகம் இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு கே.பார்த்தசாரதி கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT