Published : 22 Apr 2015 03:12 PM
Last Updated : 22 Apr 2015 03:12 PM

நில மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடிக்க வேண்டும்: ராமதாஸ்

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து முறியடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்குடன் பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது அவசரச் சட்டத்திற்கு மாற்றாக ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதா’வை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது.

விவசாயத்தை வேருடன் அழிக்கும் இந்தச் சட்டத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நிறைவேற்றியே தீருவது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு உழவர்களுக்கு எதிரான அரசு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் எந்த வகையிலும் உழவர்களுக்கு பயனளிக்கக் கூடியவை அல்ல. மாறாக உழவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தக் கூடியவை தான்.

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத் திருத்தத்தால் ஏற்படும் தீமைகளை இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆனாலும், மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இச்சட்டம் உழவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் தவறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.

கிராமப்புற பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்; அதன் மூலம் அவர்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தான் தமது நோக்கம் என்று நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

நிதியமைச்சர் அருண்ஜேட்லியோ நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் 30 கோடி உழவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்பது தான் தெரியவில்லை. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்தின் மூலம் உழவர்களின் வாழ்வில் வசந்தம் வீசும் என்று வாக்குறுதி அளிக்கும் பிரதமரும், நிதியமைச்சரும் அதற்கான செயல் திட்டம் என்ன? என்பதை தெரிவிக்க மறுப்பதிலிருந்தே அவர்கள் கூறும் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் என்பதை இந்திய மக்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தால் ஊரகப்பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாகும் என்று சொல்லும் பிரதமர், அத்தொழிற்சாலைகளில் நிலம் கொடுத்த உழவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் வழங்கிய நிலங்களின் அளவுக்கு ஏற்ப வேலைவாய்ப்பும், தொழிற்சாலையின் பங்குகளும் வழங்கப்படும் என்று அறிவித்தால் அவரது நோக்கத்தைப் பாராட்டலாம்.

அப்படி அறிவித்து, அதை சட்டத் திருத்த மசோதாவில் சேர்ப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் ஜேட்லியும் தயாரா?

நில மசோதா தொடர்பாக பிரதமரும், நிதியமைச்சரும் அளிக்கும் வாக்குறுதிகள் சாத்தியமற்றவை என்பதை மாநிலங்களவையில் கடந்த 13.03.2015 அன்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த தகவல்களே உணர்த்தும்.

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேல் கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

அவர் அளித்த தகவல்கள் இரு உண்மைகளை உணர்த்துகின்றன. முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 40% நிலங்கள், அதாவது 45,000 ஏக்கர் நிலங்கள், இன்னும் பயன்படுத்தப் படாமல் இருக்கும் நிலையில் புதிதாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதாக இருந்தால் அவற்றில் தொடங்கலாம். இரண்டாவது, நிலம் எடுத்தல் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்களின் மூலம் கையகப் படுத்தப்படும் நிலங்களும் இதேபோல் பயன்படுத்தப்படாமல் தான் இருக்கும்.

மத்திய அரசின் இந்த சட்டத்தால் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பெரு நிறுவனங்களுக்கு விற்கப்படுவதும், அந்த நிலங்களை பெருநிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை லாபம் ஈட்டுவதும் தான் நடக்கும். இதைத் தான் மத்திய அரசும், பெரு நிறுவனங்களும் விரும்புகின்றன; அதற்காகத் தான் பாடுபடுகின்றன.

இந்த திட்டம் நிறைவேறினால் உழவர்கள் வீதிக்கு வருவது உறுதி. எனவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து முறியடிக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்திலுள்ள அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நியமன உறுப்பினர்கள் என 20 பேரும் இச்சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

அதன்பின்னர் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி இம்மசோதாவை நிறைவேற்ற அரசு முயன்றால் அதையும் ஜனநாயக வழியில் முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x