Published : 19 Apr 2015 12:59 PM
Last Updated : 19 Apr 2015 12:59 PM

காரைக்கால் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை அடித்ததில் 2 மாணவிகள் காயம்: வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை

காரைக்கால் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை அடித்ததில் காயமடைந்த 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்காலை அடுத்த கீழகாசாகுடியில் உள்ள குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் ஆண்டு விழாவுக்கு பணம் செலுத்தாதவர்களை கடுமையாக அடித்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியை அமுதவள்ளி என்பவர் பிரம்பால் அடித்ததில் 6-ம் வகுப்பு மாணவிகள் கோட்டுச்சேரியைச் சேர்ந்த மணிவண்ணன் மகள் தர்ஷினி(11), ரவிக்குமார் மகள் காவ்யலஷ்மி ஆகியோர் காயமடைந்தனர்.

பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் மாலை அழுதுகொண்டே வீடுதிரும்பிய இவர்கள் இருவரும் பெற்றோர்களிடம், ஆசிரியை அடித்தது பற்றி கூறியுள்ளனர். பிரம்படியால் உடலில் காயமடைந்த நிலையில் இருந்த 2 மாணவிகளையும் அவர்களின் பெற்றோர் அழைத்துச் சென்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காரைக்கால் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்த மாணவிகளின் பெற்றோர் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். நெடுங்காடு போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைல்டு அமைப்பின் சார்பில் மருத்துவமனைக்கு வந்த உறுப்பினர் கணேசமூர்த்தி, ஆசிரியை அடித்ததில் மாணவிகளுக்கு காயமேற்பட்டதை பார்த்தார். பின்னர் அவர் கூறியபோது, “இதுகுறித்து காவல் துறை மூலம் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும். எக்காரணம் கொண்டும் குழந்தைகளை அடித்துக் காயப்படுத்துவதை பள்ளி நிர்வாகங்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x