Published : 17 Apr 2015 08:31 AM
Last Updated : 17 Apr 2015 08:31 AM

லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்ததும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

மத்திய அரசு லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்த பிறகு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தக் கோரிய மனு முடிக்கப்பட்டது.

மதுரை பொதுநலன் வழக்கு மையத்தின் அமைப்பாளர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒரு ஆண்டில் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஒரு ஆண்டு கடந்து பல மாதங்கள் ஆகியும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் அரசு துறையில் லஞ்சம் அதிகளவில் உள்ளது. இதைத் தடுக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் சரியாக விசாரிப்பதில்லை. வங்கிகளில் ஆம்பட்ஸ்மேன் (குறைதீர்ப்பு அதிகாரி) பதவி உருவாக்கிய பிறகு, ஊழல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஆவின் பாலில் தண்ணீர் கலந்துள்ளனர். சத்துணவு திட்டத்துக்கு முட்டை வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாமல் உள்ளனர். எனவே, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு லோக்பால் சட்டத்தில் சில திருத்தம் மேற்கொள்ள உள்ளது. அந்த திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அந்த மனு முடிக்கப்பட்டது. எனவே, இந்த மனுவை விசாரிக்க வேண்டியதில்லை என்றார்.

இதையடுத்து, இந்த மனுவை முடித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மத்திய அரசு லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பிறகு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தாவிட்டால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x