Published : 28 Apr 2015 07:21 PM
Last Updated : 28 Apr 2015 07:21 PM

எங்களை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா?- மத்திய அரசு மீது மீனவர்கள் அதிருப்தி

இந்திய மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது ஒட்டு மொத்த மீனவர்கள் இனத்தையே குற்றப் பரம்பரையாக சித்தரிக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என மீனவப் பிரதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுக்கு கடலில் முப்படை பாதுகாப்பு வழங்கக்கோரி, வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய கடல் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இதற்கு மத்திய அரசின் சார்பில் இந்திய கடலோர காவல்படையின் துணை இயக்குநர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியாலின் அளித்த மனுவில், இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி செல்வதால் இலங்கை கடலோர காவல்படைக்கும் நமது மீனவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் ராமேசுவரம் மீனவப் பிரநிதி அருளானந்தம் கூறும்போது, " மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரினால் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிப்பதுடன் இந்திய மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது ஒட்டு மொத்த மீனவர்கள் இனத்தையே குற்றப் பரம்பரையாக சித்தரிக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.

இந்திய மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்கன் என்ற குற்றச்சாட்டை இதுநாள் வரையிலும் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகள் கூட வைத்தது கிடையாது. மத்திய அரசின் இந்தக் கருத்துக்களினால் தமிழக மீனவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மீனவர்கள் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த அதே கொள்கையையே தான் நரேந்திர மோடியின் பாஜக அரசும் பின்பற்றுகிறது. முன்னதாக 30.01.2014 அன்று பாம்பனில் நடைபெற்ற கடல் தாமரைப் போராட்டத்தில் பா.ஜ.க தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், 17.04.2014 அன்று ராமநாதபுரத்தில் நரேந்திரமோடி ஆகிய இருவரும் மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மீறி தற்போது முற்றிலும் மாறான நிலைப்பாடை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளதே தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவதற்கு காரணமாகும்.

மீனவர்கள் தங்களின் மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட தேவைப்பாட்டால் இந்திய அளவில் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி எங்கள் உரிமைகளை மீட்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x