Published : 03 Apr 2015 10:29 AM
Last Updated : 03 Apr 2015 10:29 AM

திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்படும் அப்பாவி சிறுவர்கள்: 20 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் கடத்தல் கும்பல்

கடந்த ஒன்றரை மாதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடத்தப்பட்ட 6 சிறுவர்கள் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கடத்தி திருட்டு தொழிலில் ஈடுபடுத்தியதாக இதுவரை 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற சிறுவனை கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி திருவெறும்பூர் காந்தி நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் கடத்தி வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தி வந்துள்ளது. கடத்தல் கும்பலிடமிருந்து அந்த சிறுவன் சமயோஜிதமாக செயல்பட்டு தப்பித்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறி, பேருந்தின் நடத்துநரிடம், தன்னை ஒரு கும்பல் கடத்தி வந்த விவரத்தைக் கூறி அவர்களிடமிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும், தன்னிடம் டிக்கெட் செலவுக்கு பணம் இல்லை எனவும் தெரிவித்தான்.

அந்த பேருந்தின் நடத்துநர் சிறுவனை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார். போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரணை செய்து காந்தி நகர் கும்பலைச் சேர்ந்த சிலரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது, மேலும் ஒரு சிறுவன் கடத்தப்பட்டதும் தெரியவந்தது. கும்பகோணம் விஜய் அளித்த தகவலின்பேரில் காட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சிறுவனை மீட்டனர். இந்த 2 சிறுவர்களையும் கடத்திய விவகாரம் தொடர்பாக ரஜினி, அர்ஜுனன், சுப்பிரமணி, அழகர் ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதுவரை 6 பேர் மீட்பு

அதையடுத்து போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தினர். அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறுவர்களை கடத்தி வந்தும், ஏழ்மைநிலையில் உள்ள தம்பதிகளைச் சந்தித்து ஆசைவார்த்தை கூறி சொற்ப விலைக்கு ஆண் குழந்தைகளை வாங்கி வந்தும் திருட்டுத் தொழிலில் சிலர் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையின் போது திருவெறும்பூர் போலீஸாரிடம், காந்தி நகரைச் சேந்த சிலர் அவர்களுக்குப் போட்டியாக உள்ள, சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட எதிர்தரப்பைச் சேர்ந்த சிலரைப் பற்றிய தகவலைத் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவர்களில் பலர் குஜராத் மாநிலத்தில் திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் 4 சிறுவர்களை மீட்டு வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

15 பேரில் 3 பேர் பெண்கள்

இதுவரை சிறுவர்கள் கடத்தல் தொடர்பாக ரஜினி, அர்ஜுனன், சுப்பிரமணி, அழகர், விஜய், முரளி, மதன்குமார், முத்துக்குமார், கணேசன், முனியம்மாள், கன்னித் தமிழ், கார்த்திக், காயத்ரி, அருண் குமார், சிவா ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் கணேசன், முனியம்மாள், கன்னித் தமிழ் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல கார்த்திக், காயத்ரி ஆகியோரும் தம்பதியர்.

மேலும் 30 சிறுவர்கள்

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் ஆண் குழந்தைகளைக் கடத்தி வந்து திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 30 சிறுவர்கள் வரை கடத்தப்பட்டு திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள தகவலும், சிறுவர்கள் கடத்தலில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

தடுக்கும் அரசியல் தலையீடு

இந்த பகுதியில் சிறுவர்களைக் கடத்தி திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்கி அரவணைத்து வைத்துள்ளதால் முக்கியக் குற்றவாளிகளை நெருங்கவிடாமல் அரசியல் குறுக்கீடு தடுப்பதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, போலீஸார் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வழக்கில் தீவிரம் காட்டாமல் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருட்டு பயிற்சியில் ஈடுபட மறுத்தால் இரும்புக் கம்பியால் அடிப்பதுடன், சூடு போட்டு காயமேற்படுத்துதல் போன்ற கொடூரமான செயல்களில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவார்களாம். அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, சொல்லும் இடத்தில் படுத்து உறங்கிவிட்டு சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளதாக மீட்கப்பட்ட சிறுவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினாலும், போலீஸார் தனி கவனம் செலுத்தி தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின்பிடியில் நிறுத்தி தண்டிக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x