Last Updated : 20 Apr, 2015 09:44 AM

 

Published : 20 Apr 2015 09:44 AM
Last Updated : 20 Apr 2015 09:44 AM

24-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மக்கள் பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

திமுகவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் முதல் கூட்டம், சென்னையில் 24-ம் தேதி நடக்கிறது. சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் குறித்த பட்டியலுடன் வருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியாக பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 31 ஆக திமுக மாவட்டங்கள், 65 அதிகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், புதிய மாவட்டச் செயலாளர்களின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் 24-ம் தேதி நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். தேர்தல் நிதி வசூல், மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

திமுக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு நடக்கும் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான பணிகளை தொடங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்த பட்டியலை தயாரித்து கொண்டுவருமாறு மாவட்டச் செயலாளர்களிடம் திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, தொகுதி வாரியாக மக்கள் பிரச்சினைகள் குறித்த பட்டியல் தயாரிக்கும் பணியில் மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பட்டியலை வைத்து, மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளை முன்வைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக தலைமை நிர்வாகிகளும் பங்கேற்பர். ஊராட்சி மற்றும் ஒன்றிய அளவிலான பிரச்சினைகளுக்காக மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டந்தோறும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படவுள்ள தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட்டியலை வைத்து, மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளை முன்வைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x