Published : 09 Apr 2015 05:59 PM
Last Updated : 09 Apr 2015 05:59 PM

ஜெயகாந்தன் எழுத்துகள் காலத்தால் மறையாது: கருணாநிதி

ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துகள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில்நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், '' தமிழ் இலக்கிய உலகத்தில் ஜே.கே என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியுற்றேன். துயரம் தனித்து வருவதில்லை என்பது எவ்வளவு உண்மை.

நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி கிடைத்தது.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று.

என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் இசபெல்லா மருத்துவ மனையிலே அனுமதிக்கப் பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனி மொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்.

உடல் நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மா. ராஜேந்திரனிடம், ''நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத் தான்செல்வேன்'' என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, ''என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்'' என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.

மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருது, பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருது, முரசொலி அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருது என பல விருதுகளைப் பெற்றவர்.

பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர். இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துகள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில்நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x