Published : 07 Apr 2015 08:28 AM
Last Updated : 07 Apr 2015 08:28 AM
சாமானிய மக்களும் அதிகளவில் பயன்படுத்தும் மணியார்டர் சேவை நிறுத்தப்படவில்லை. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகின்றன என்று தபால் துறை விளக்கமளித்துள்ளது.
நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், “மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுவதாக தகவல்கள் பரவிவருகின் றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால்துறை விளங்கிவருகிறது. அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால்துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.
இது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’, ‘மொபைல் மணி ஆர்டர்’, ‘சர்வதேச மணி ஆர்டர்’ போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்டார தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில் மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும். தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT