Published : 19 Apr 2015 01:17 PM
Last Updated : 19 Apr 2015 01:17 PM

திரைப்பட தயாரிப்பாளர் ‘ஜாக்பாட்’ சீனிவாசன் காலமானார்

‘தர்மயுத்தம்’, ‘மீண்டும் கோகிலா’, ‘டவுரி கல்யாணம்’ உட்பட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த ‘ஜாக்பாட்’ சீனிவாசன் (82) சென்னையில் நேற்று காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ‘ஜாக்பாட்’ சீனிவாசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் காலமானார். அவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் இறந்து விட்டார்.

‘ஜாக்பாட்’ சீனிவாசனின் சொந்த ஊர் காரைக்குடி அருகில் உள்ள திருப்பத்தூர். ஆரம்ப காலங்களில் ஏவி.எம், விஜயா வாஹினி ஸ்டுடியோக்களில் பணிபுரிந்தார். குதிரை பந்தயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் அதன் மூலம் கிடைத்த ஜாக்பாட் பரிசை வைத்து, தேவி நடித்த ‘நாலு மணி பூக்கள்’ என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். அதன்பிறகு ‘ஜாக்பாட்’ சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டார்.

‘ஜாக்பாட்’ சீனிவாசனின் உடல் வடபழனி, தெற்கு சிவன்கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, இன்று மதியம் 1.30 மணிக்கு கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x