Published : 11 Apr 2015 09:07 AM
Last Updated : 11 Apr 2015 09:07 AM

வாக்காளர், ஆதார் அட்டை விவரங்களை இணைக்க ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள்: தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

வாக்காளர், ஆதார் அட்டைகளில் உள்ள விவரங்களை இணைக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

வாக்காளர் விவரம் ஆதார் இணைப்பு முகாம் குறித்து செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா கூறியதாவது:

வாக்குச்சாவடி அலுவலர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்தல், ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பெறுவதுடன் திருத்தம் இருப்பின் அதற்கான படிவத்தையும் பூர்த்திசெய்து பெறுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 2 கோடி வாக்காளர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 35 லட்சம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் கணினியில் பதியப்பட்டுள்ளன.

ஆதார் விவரங்களை தர முடியாதவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் 2, 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முதல் முகாம் 12-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் ஆதார் எண் இணைப்புடன் திருத்தம், நீக்கம், ஆதார் அட்டை மாற்றுதல், புகைப்படம் மாற்று தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம்.

மேலும் 13-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்களில், அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அலுவலகத்தில் சிறப்பு விசாரணை நடத்துவர். வாக்காளர் அளித்த விவரங்களில் குழப்பம், ஆட்சேபணைகள் இருப்பின் அவர் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தி பதிவுகள் முழுமையாக்கப்படும். இப்பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதுதான் முக்கிய பணி. ஆதார் எண் இல்லை என்றால், ஆதார் இஐடி எண் பெறப்படும் அல்லது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்படும் ‘டின்’ எண் பெறப்படுகிறது. எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டால், அந்த எண் வாக்காளர் விவரங்களுடன் தானாக சேர்ந்துவிடும். இதன் மூலம் 100 சதவீத இலக்கை அடையமுடியும்.

சென்னையில் 68 சதவீதமும், இதர மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கு அதிகமாகவும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆதார் வழங்கப்படாத பகுதிகளில், வருவாய் மற்றும் மாநகராட்சி துறைகளுடன் இணைந்து, நடமாடும் ஆதார் முகாம் நடத்தவும் முடிவெடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x