Published : 19 Apr 2015 01:14 PM
Last Updated : 19 Apr 2015 01:14 PM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்ணாடி வழியாக முதலைகளை பார்க்கும் கூடம்: ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்ணாடி வழியாக கங்கை நீர் முதலைகளை அருகில் இருந்து பார்க்கும் வசதி கொண்ட கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

கங்கை ஆற்றுப் பகுதியில் பரவலாக காணப்பட்ட முதலைகள் கங்கை நீர் முதலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த முதலைகள் மற்ற முதலைகளைப் போல அல்லாமல் தனது வாழ்நாளை அதிக நேரம் நீரில் கழிக்கக்கூடியவை. அழியும் நிலையில் உள்ள விலங்குகளின் பட்டியலில் இருக்கும் இந்த முதலைகளில் சில வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த முதலைகளை கண்ணாடி வழியாக மிக அருகில் இருந்து பார்க்கும் கூடத்தை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குழந்தைகளுக்கு விலங்குகளை காட்சிப்படுத்தும் முறையை மேம்படுத்தும் வகையில் நீருக்கடியில் கங்கை நீர் முதலைகளை பார்வையிடும் கூடம் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எங்களிடம் உள்ள 2 கங்கை நீர் முதலைகளை பிரித்து இந்த கூடத்தில் விட இருக்கிறோம். இந்த கூடத்தில் முதலைகளின் இனப்பெருக்கத்துக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாது. இந்த முதலைகளை குழந்தைகள் மிக அருகில் இருந்து பார்க்க முடியும். இது அவர்களுக்கு பிரமிப்பையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.

இந்தியாவில் உள்ள அரசு உயிரியல் பூங்காக்களில் கண்ணாடி வழியாக விலங்குகளை பார்வையிடும் கூடம் அமைக்கப்படுவது இதுதான் முதல்முறை. இக்கூடம் விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x