Published : 25 May 2014 09:30 AM
Last Updated : 25 May 2014 09:30 AM

ராஜபக்சே வருகையை எதிர்த்தால் இரு நாட்டு மீனவர்களின் நலன் பாதிக்கப்படும்: ராமேஸ்வரத்தில் மீனவ சங்கப் பிரதிநிதி பேட்டி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை எதிர்க்கக் கூடாது இதனால், இருநாட்டு மீனவர்களின் நலன் பாதிக்கப்படும் என விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகி போஸ் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கொழும்பில் நடைபெற்ற இந்தியா-இலங்கை இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த மே 12-ம் தேதி தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக் சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. இதனால் இருநாட்டு மீனவர் களின் மீனவர்களின் நலன் பாதிக்கப்படும். மேலும் மீனவர் களின் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறாமலேயே போய்விடும் அபாயமும் உள்ளது.

கடந்த ஜனவரி 31 அன்று பாஜக தமிழக மீனவரணி சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடல் தாமரைப் போராட்டம் பாம்பனில் நடைபெற்றது. இதில் சுஷ்மா ஸ்வராஜ் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறையை உருவாக்கி அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார். மேலும் நரேந்திரமோடி பிரதமரானால் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மத்திய அரசில் சிறிய அளவிலான பிரதிநிதித்துவம்கூட மீனவர்களுக்கு இல்லை. ஒரு கேபினெட் அமைச்சர் பதவியில்கூட மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் அமர்த்தப்பட்டதில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசில் மீன்வளம் மற்றும் மீனவர் நல அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.

கலால் வரி, உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி போன்ற வரி விதிப்புகளில் இருந்து விதிவிலக்கு அளித்து மீனவர்களுக்கான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மத்திய அரசின் அடக்க விலைக்கே வழங்க வேண்டும். இயற்கை பேரிடர் காரணமாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, மீனவர் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், இவற்றை மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பு என்றார் போஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x