Published : 20 Apr 2015 11:04 AM
Last Updated : 20 Apr 2015 11:04 AM

ஒகேனக்கல், குமாரபாளையத்தில்: காவிரியில் மூழ்கி 4 பேர் பலி, மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர்.

போலீஸார், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான பகுதிகளில் குளிக்க அறிவுறுத்தி வந்தனர். அத்திமரத்துக் கடவு, மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் அத்திமரத்துக்கடவு பகுதியில் குளித்த ஒரு இளைஞர் நீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம் கொங்கம்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவக்குமார் (20) நண்பர்கள் 7 பேருடன் நேற்று ஒகேனக்கல் சென்றுள்ளார். நண்பர்களுடன் அத்திமரத்து கடவு பகுதியில் குளித்து கொண்டிருந்த போது சிவக்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஒகேனக்கல் போலீஸார் சிவக்குமாரின் உடலை மீட்டனர்.

இதே போல், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் மகன் ரமேஷ்குமார் (26). பெங்களூருவில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நண்பர்களுடன் ஒகேனக்கல் வந்தவர் மணல் திட்டு பகுதியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். கர்நாடக மாநிலம் குடகு அடுத்த மடக்கோரியைச் சேர்ந்தவர் ரகு (28). இவர், நேற்று தனது நண்பர்கள் 5 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.

சினிபால்ஸ் அருகே குளித்துக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள அருவியில் எதிர்பாராத விதமாக ரகு தவறி விழுந்தார். ஒகேனக்கல் போலீஸார் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் நேற்று மாலை வரை தேடியும் ரகு கிடைக்கவில்லை. இது குறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் நடந்த 3 சம்பவங்களும் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு மாணவர்கள் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சம்பந்தன் தெருவைச் சேர்ந்தவர் வெங்க டேசன். இவர் நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் பழைய பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது, வெங்கடேசனின் மகன் கார்த்தி கேயன் (17) மற்றும் அவரது உறவினர் மகன் கவுதம் (17) ஆகிய இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குமாரபாளையம் போலீஸார் மீனவர்கள் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டனர். இறந்த இருவரும் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x