Published : 14 Apr 2015 10:15 AM
Last Updated : 14 Apr 2015 10:15 AM

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த முக்கிய அம்சங்கள்

சென்னையில் நேற்று நடந்த போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

12-வது ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: போக்குவரத்துத் தொழி லாளர்கள் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பெற்று வந்த அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் 5.5 சதவீதம் கணக்கிட்டு அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து புதிய அடிப்படை ஊதியம் 2013 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிர்ணயம் செய்து வழங்கப்படும். இதனால், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,350 முதல் அதிகபட்சமாக ரூ.5,941 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அரசாணையின் அடிப் படையிலேயே போக்குவரத்து ஊழியர் களுக்கு உடனுக்குடன் அகவிலைப்படி வழங்கப்படும். 19,437 தினக்கூலி மற்றும் சேமநல பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.37.25 கோடி ஊதிய உயர்வு வழங்கப்படும். இதர படிகளை உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.17.91 கோடி பணப் பயன் கூடுதலாக வழங்கப்படும்.

பணி நிரந்தரம்

240 நாட்கள் திருப்திகரமாக பணி முடித்தபின் பணி நிரந்தரம் செய்யப்படுவர். இது மாதந்தோறும் நடைமுறைபடுத்தப்படும். தொழில்நுட்ப பணியாளர் காலியிடங்களை நிரப்பும்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி பதவி உயர்வு வழங்கப்படும்.

வாரிசுதாரர்களின் பயிற்சி காலம் 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்படும். முதலாம் ஆண்டு மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.1,440-ல் இருந்து ரூ.3,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு ரூ.2,190 இருந்து ரூ.4,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், அவர்களது வாழ்க்கைத் துணையர் (கணவன் அல்லது மனைவி) மற்றும் இறந்த தொழிலாளர்களின் துணையரும் நகர மற்றும் புறநகர் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஓய்வுகால சேமநல நிதித் திட்டம் மூலம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் மாதாந்திர தொகை ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும். நிர்வாக தரப்பு பங்களிப்பாக ரூ.50 செலுத்தப்பட்டு, சேம நல நிதித்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திருமண முன்பணம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், கல்வி முன்பணம் ரூ.1000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்படும்.

இவ்வாறு ஊதிய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x