Published : 02 Apr 2015 01:35 PM
Last Updated : 02 Apr 2015 01:35 PM
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடியில் புதுவாழ்வு திட்டம் மூலம் மலிவு விலை இளநீர் கடை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இளநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் 700 இளநீர் விற்பனையானது.
தூத்துக்குடியில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. கடந்த இரு தினங்களாக லேசான மழை பெய்த போதிலும் பகல்நேர வெப்பநிலை அதிகமாகவே இருந்து வருகிறது. வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் இயற்கை குளிர்பானங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மலிவுவிலை இளநீர்
உடல் வெப்பத்தை குறைப்பதில் முதலிடத்தில் இருப்பது இளநீர். எனவே, மக்கள் இளநீரையே அதிகம் வாங்கி குடிக்கின்றனர். ஆனால் இளநீர் விலையோ சாதாரண மக்கள் வாங்கி குடிக்கும் நிலையில் இல்லை. தூத்துக்குடியில் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது.
இதனை கருத்தில் கொண்டு சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் மலிவு விலை இளநீர் கடை திறக்க ஆட்சியர் ம.ரவிக்குமார் ஏற்பாடு செய்தார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பண்ணை பசுமை காய்கறி கடைக்கு அருகிலேயே, இந்த மலிவு விலை இளநீர் கடையை நேற்று காலை ஆட்சியர் திறந்து வைத்தார்.
ரூ.20-க்கு விற்பனை
புதுவாழ்வு திட்டம் மூலம் திறக்கப்பட்டுள்ள இந்த கடையில் ஒரு இளநீர் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டப்பிடாரம் கீழக்கோட்டையை சேர்ந்த வசந்தம் காய்கறி உற்பத்தியாளர் குழு (பெண்கள்) மூலம் இந்த கடை நடத்தப்படுகிறது.
ஆட்சியர் ம. ரவிக்குமார் கூறும்போது, 'ஒவ்வொரு பெண்ணையும் தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே தொழில் செய்யக்கூடிய பெண்களை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழு எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 8,244 பெண்கள் மற்றும் ஆண்களை உள்ளடக்கிய 352 ஒத்த தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலை கிடைக்கும் வகையிலும், மக்களுக்கு குறைவான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் வகையிலும் இந்த குழுக்கள் மூலம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் கோவில்பட்டியில்
அதன் ஒரு பகுதியாகவே இந்த மலிவு விலை இளநீர் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை வெற்றி பெற்றால், அது பண்ணை பசுமை காய்கறி கடையுடன் இணைக்கப்பட்டு, புதுவாழ்வு திட்டம் மூலம் வேறொரு இடத்தில் இளநீர் கடை திறக்கப்படும். கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மலிவு விலை இளநீர் கடைகள் திறக்கப்படும்' என்றார் ஆட்சியர்.
ரூ. 1 மட்டுமே லாபம்
வசந்தம் காய்கறி உற்பத்தியாளர் குழு தலைவி எஸ்.தனலெட்சுமி கூறும்போது, 'எங்கள் குழுவில் மொத்தம் 20 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம். தினமும் 3 பேர் வீதம் சுழற்சி அடிப்படையில் இளநீர் கடையில் வேலை செய்வோம்.
உடன்குடி பகுதியில் இருந்து ஒரு இளநீரை ரூ. 17.50 விலையில் வாங்குகிறோம். போக்குவரத்து செலவு எல்லாம் சேர்த்து ரூ. 19 ஆகிவிடும். ஒரு இளநீருக்கு ரூ.1 மட்டுமே லாபம் கிடைக்கும். எங்களுக்கு லாபம் நோக்கமல்ல.
ரூ. 14 ஆயிரத்துக்கு விற்பனை
முதல் நாளில் 700 இளநீர் வாங்கி வந்திருந்தோம். இவை அனைத்தும் பிற்பகல் 2 மணிக்கே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதன் மூலம் ரூ. 14 ஆயிரம் கிடைத்துள்ளது.
வரும் நாட்களில் கூடுதல் இளநீரை விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்படும். எவ்வளவு இளநீர் தேவையென்றாலும் வாங்கி வந்து விற்பனை செய்வோம்' என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT