Published : 18 Apr 2015 11:20 AM
Last Updated : 18 Apr 2015 11:20 AM

அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை வசதி தேவை: ராமதாஸ்

அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்மா உணவகங்கள், கோவில் தோறும் யாகங்கள் போன்ற நடவடிக்கைகள் போட்டிபோட்டுச் செய்யப்படும் போதிலும் கல்விக்கு முக்கியத்துவம் தராத அவலநிலை நிலவுகிறது.

தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருப்பது வழக்கம். மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பிரிவு அல்லது இரு பிரிவுகள் இருக்கும். இதனால் ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் பிரிவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 5 அல்லது 10 வகுப்பறைகள் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆனால், தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள 47.18% அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 2 வகுப்பறைகள் மட்டும் தான் இருப்பதாக கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நகர்ப்புறங்களில் உள்ள 18% பள்ளிகளில் 2 வகுப்பறைகள் மட்டுமே இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, இரு வகுப்பறைகள் உள்ள பள்ளிகள் உட்பட பெரும்பாலான பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த இரு ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அலுவல் சார்ந்த பணிக்காகவோ அல்லது சொந்தப் பணிக்காகவோ அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் ஒரே ஒரு ஆசிரியரே அனைத்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை 2 வகுப்பறைகளில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இரு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். இத்தகைய சூழலில் ஏதேனும் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும் போது மற்ற வகுப்பு மாணவர்களை விளையாடவோ, வேறு வேலைகளை செய்யவோ பணிப்பது அல்லது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்தை நடத்துவது தான் சாத்தியமாகும்.

இந்த இரு அணுகுமுறைகளுமே மாணவர்களின் கற்கும் திறனை வளர்க்காது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்களின் கண்காணிப்பு இல்லாமல் மாணவர்களை விளையாட அனுமதித்தால் அவர்கள் காயமடைவது உள்ளிட்ட பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

தமிழகத்தில் ஊரகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் 43.8 விழுக்காட்டினரால் ஆங்கில எழுத்துக்களை அடையாளம் காண முடியதில்லை - ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 33.1 விழுக்காட்டினரால் ஆங்கில வாக்கியங்களைப் படிக்க முடியவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் ஊரகப் பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களும், வகுப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளும் இல்லை என்பது தான். இந்தியா விடுதலை அடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி வழங்குவதற்கான கட்டமைப்புகள் கூட உருவாக்கப்படவில்லை என்பது அவலத்திலும் அவலம் ஆகும்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கப் போவதாக கடந்த 49 ஆண்டுகளாக மாறிமாறி முழக்கமிட்டு வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை எவ்வளவு மோசமான நிலையில் வைத்திருக்கின்றன என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் ஒரு டாஸ்மாக் மதுக்கடைக்கு 6 முதல் 7 ஊழியர்களை நியமிக்கும் தமிழக அரசு, 5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர்களை நியமிப்பதிலிருந்தே கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை உணரலாம். கூறை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக, ஊரகப்பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் தேவையான வகுப்பறைகளைக் கட்டி ஆசிரியர்களை நியமிக்க முடியாத தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பா.ம.க. ஏற்கவில்லை என்ற போதிலும், இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு அரசு தொடக்கப்பள்ளிகளி வழங்கப்படும் ஆங்கில வழிக் கல்வி எந்த அளவுக்குத் தரமாக இருக்கும் என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

எனவே, விளம்பரத்திற்காக திட்டங்களை அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பதை விட, தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x