Published : 14 Apr 2015 10:34 AM
Last Updated : 14 Apr 2015 10:34 AM
அரசியலைத் தாண்டி மது விற்பனை, கல்விக் கொள்ளை, புகையிலை பயன்பாடு, சமூக நீதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போதும் ஆழமான கண்ணோட்டத்தோடு குரல் கொடுக்கிறார். அவரிடம் பேசியபோது, பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவரது சிறப்புப் பேட்டி:
சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எண்ணம் உங்களுக்கு முதன்முதலில் எப்படி வந்தது?
அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிவிட்டு, தனியாக மருத்துவமனை தொடங்கினேன். அப்போது ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தேன். ஒரு டாக்டராக பல்வேறு தரப்பு மக்களை சந்தித்தபோது அவர்களின் பிரச்சினைகளை அறிந்தேன். கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய மக்களுக்காக ஏன் போராடக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. அப்படித் தான் பொது வாழ்க்கையில் இறங்கி போராடத் தொடங்கினேன்.
இலங்கை, மலேசியா, இப்போது ஆந்திரா என தமிழர்கள் எங்கு சென்றாலும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்களே?
தமிழகத்தில் இளைஞர்களுக்கு தரமான கல்வி, வேலை வாய்ப்பு அளிக்காததால் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். அவர் களுக்கான வாழ்வாதாரம் இங்கு இல்லாததால், ஆபத்தைப் பற்றி யோசிக்காமல் சென்று உயிரை இழக்கின்றனர். இங்கே மாற்றுக்கட்சி ஒன்று ஆட்சிக்கு வர வேண்டும். அதுதான் தீர்வுக்கான ஆரம்பமாக இருக்க முடியும்.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா?
நிச்சயமாக சாத்தியமானதுதான். 1971-ம் ஆண்டு வரை மது பற்றி தெரியாத தலைமுறை இருந்தது. கருணாநிதிதான் மறுபடி இங்கே மதுவை கொண்டுவந்தார். இப் போது 15 வயது மாணவர்கள் கூட வகுப்பிலேயே குடிக்கின்ற னர். எந்த ஆட்சி இருந்தாலும், மதுக்கடைகள் போலவே கள்ளச் சாராயமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளுங்கட்சியினர் உதவியுடன் எங்கள் ஊரிலேயே விற்கப்படுகிறது. எனவே, கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று காரணம் சொல்ல முடியாது. விஏஓ, போலீஸ், மகளிர் குழுக்களை பொறுப்பாக்கி பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமே.
மதுவை எதிர்ப்பதால் வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயமும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் அல்லவா?
என் கட்சிக்காரர்களே இந்தக் கேள்வியை எழுப்பினர். வாக்குகளைப் பற்றி கவலைப்பட்டால் இப்பிரச்சினையை எடுத்திருக்க முடியாது. சமூக மாற்றத்துக்காக போராடுகிறோம் என்று அவர்களுக்கு புரிய வைத்தேன். இப்போது அவர்களும் தீவிரமாக என்னுடன் போராடுகின்றனர்.
மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான இடஒதுக்கீடு கிடைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் மூலம் உங்கள் நோக்கம் நிறைவேறியதா?
நாங்கள் போராடிய நோக்கம் நிறைவேறவில்லை என்பதே உண்மை. சமநிலையற்ற சமூக மாகவே இன்னும் இருக்கிறது.
சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதையும், கலப்புத் திருமணம் தான் சாதிகள் ஒழிய ஒரே வழி என்ற வாதத்தையும் ஏற்கிறீர்களா?
எங்காவது சாதி ஒழிந்ததா? சமூக, பொருளாதார காரணிகளை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் எல்லாருக்கும் கிடைத்தால்தான் சாதி ஒழியும். கலப்புத் திருமணம் செய்தவர்கள் ஏதாவது ஒரு சாதியைச் சொல்லி சான்றிதழ் பெறுகின்றனர். எனவே, அதன்மூலம் மட்டுமே சாதியை ஒழித்துவிட முடியாது.
‘ஆதிக்க சாதிகள்’ என்ற சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் இருக்கிறதா?
அதிக கல்வி அறிவு, விழிப் புணர்வு ஏற்பட்டு விட்டதால், தற்போது யாரும் யாரையும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அப்படிப்பட்ட நிலை இப்போது இல்லை. அந்த நிலை நீர்த்துவிட்டது.
பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?
அதை இப்போது சொல்ல முடி யாது. ஆனால் அதிமுக, திமுக வுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்று 3 ஆண்டுகளாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி பற்றி?
இங்கு ஆட்சியே நடக்கவில்லை. தஞ்சாவூர் பொம்மை ஆட்சிதான் நடக்கிறது. ஜெயலலிதாதான் ஆட்சி நடத்துகிறார். பன்னீர்செல்வம் கையெழுத்து போட மட்டும் பயன்படுகிறார். ஊழல் எங்கும் நிறைந்துள்ளது. இதை வெளியிட ஊடகங்கள் தயங்குகின்றன.
ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியைப் பிடித்துவிட்டது. ஆனால், நீங்கள் கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகியும் ஏன் உங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை?
மாறி மாறி கூட்டணி வைத்தது எங்களது தவறு. அப்படி செய்யா மல் இருந்திருந்தால், அப்போதே மாற்று சக்தியாக வந்திருப்போம். இப்போது அந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேருவதில்லை என்று உறுதியுடன் உள்ளோம் ஆம் ஆத்மியைவிட சிறந்த செயல் திட்டங்களை வைத்துள்ளோம். அதை விரைவில் செயல்படுத்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT