Published : 27 May 2014 10:14 AM
Last Updated : 27 May 2014 10:14 AM
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு, கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 22-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, டாமன்-டையூ, அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 47,071 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் 10,931 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சென்னை மண்டலம் மற்றும் கேரளம், லட்சத்தீவுகள் பகுதிகளை உள்ளடக்கிய திருவனந்தபுரம் மண்டலத்தின் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
சிபிஎஸ்இ-யைப் பொறுத்த வரை 12-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் என்று எதையும் வெளியிடு வதில்லை. சென்னை மண்டலத்தில் மாணவர் தேர்ச்சி பட்டியல் விவரம் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவ் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஒவ்வொரு பள்ளிக்கும் தேர்வு முடிவுகளும் மாணவர்களின் மதிப்பெண் விவரமும் அனுப்பப்பட்டுவிட்டன. அதன்படி, சென்னை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் 500-க்கு 490-க்கு மேல் பெற்றுள்ளனர்.
493 மதிப்பெண் பெற்ற அக்சய்
நுங்கம்பாக்கம் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவர் அக்சய் அரவிந்தன், 500-க்கு 493 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்: ஆங்கிலம்-98 கணிதம்-100 இயற்பியல்-98 வேதியியல்-99 கம்ப்யூட்டர் சயின்ஸ்-98. சாதனை படைத்த மாணவர் அக்சய் அரவிந்தனை பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி, முதல்வர் ஷியாமளா சேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
நங்கநல்லூர் மாணவர் ஸ்ரவண்
நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் எச்.ஸ்ரவண், 500-க்கு 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண்:
ஆங்கிலம்-95; கணிதம்-100; இயற்பியல்-98; வேதியியல்-100; உயிரியல்-98. ஸ்ரவனுக்கு பள்ளியின் முதல்வர் கே.மோகனா, செயலாளர் எஸ்.பட்டாபிராமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். 100 சதவீத தேர்ச்சி பெற்ற இப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 480-க்கு மேல் மதிப்பெண் எடுத்திருப்பதாகவும் 66 பேர் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதி நல்ல மதிப்பெண் வாங்கியிருப்பதாகவும் முதல்வர் மோகனா கூறினார்.
அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி வி.பூர்ணிமா, 500-க்கு 490 மதிப்பெண்ணும், எம்.ஐஸ்வர்யா, எஸ்.சங்கரி ஆகியோர் 489 மதிப்பெண்ணும், வி.சாய் சினேகா 487 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர். அவர்களை பள்ளியின் முதல்வர் பி.சி.செல்வராணி பாராட்டினார். இங்கு தேர்வெழுதிய 291 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோபாலபுரம் டி.ஏ.வி. பெண்கள் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பர்சானா 500-க்கு 490 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். 487 மதிப்பெண் எடுத்து ஆர்.சங்கீதா, மோக்சி ஆர்.ஜெயின் ஆகியோர் 2-ம் இடத்தைப் பிடித்தனர். வணிகவியல் பிரிவில் ஆர்.சித்ரா (489 மதிப்பெண்) முதலிடமும், எம்.சங்கீதா (486) 2-ம் இடமும், ஏ.ஆர்.அழகுமீனாட்சி (485) 3-ம் இடமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி முதல்வர் கே.சி.உஷா பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT