Published : 24 Apr 2015 03:14 PM
Last Updated : 24 Apr 2015 03:14 PM

கியூப், யூஎஃப்ஓ-வுக்கு எதிராக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம் முடிவு

கியூப் (QUBE), யூ.எஃப்.ஓ. (UFO) நிறுவனங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு தமிழ்த் திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

QUBE, UFO நிறுவனங்களுக்கு எதிராக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார்கள். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது:

"QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியினை செலுத்துவதாக தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கின்றனர். ஆனால், அந்த தொகையினை அரசுக்கு செலுத்துக்கிறார்களா இல்லையா என்றும் தெரியவில்லை.

மேலும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களை திரையிடும் போது அந்தந்த தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இதன் மூலம் ஒரு பெரும் வருவாய் QUBE மற்றும் UFO நிறுவனங்களுக்கும், இன்னொரு பகுதி திரைத்துறை சார்ந்த வேறு ஒரு அமைப்புக்கும் போய்க் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறிய தொகை கூட கிடைப்பதில்லை. மேலும் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெளியிடும் போது, கட்டணமாக ஒரு பெரும் தொகையை வசூலிக்கின்றனர். தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டுமென்ற தனி நபர் ஆதிக்கத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் உரிமைகளை முடக்கி வருகிறார்கள்.

அவர்கள் செய்யும் வேலைக்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டு தயாரிப்பாளர்களின் லாபத்தை தன்னயப்படுத்தும் QUBE மற்றும் UFO நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு விதமாக நேற்றைய தினம் எங்களது கோரிக்கைகள் அடங்கிய அமைதி ஊர்வலத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், மேற்கண்ட கூட்டத்தை நடத்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அனுமதி கிடைக்காத காரணமாக தற்காலிமாக ஊர்வலம் தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், இதற்கான இடம் மற்றும் முறையான அனுமதி பெற்றப்பின் அரசின் ஒப்புதலோடு ஒட்டுமொத்த திரையுலகின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x