Published : 07 Apr 2015 10:29 AM
Last Updated : 07 Apr 2015 10:29 AM

திமுக ஆட்சிக் கால திட்டங்களை அதிமுக அரசு முடக்குகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு முடக்குகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசும்போது, ‘‘காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியும் 25 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. 71 கி.மீ தொலைவுக்கு குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் கொண்டு செல்ல அனுமதி வாங்கவில்லை.

திமுக ஆட்சியில் தொடங்கிய இந்த திட்டத்தை முடக்குவதை கண்டித்து நாங்கள் போராட்டம் அறிவித்தோம். இதையடுத்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்துவிட்டு, ஏப்ரல் 14-ம் தேதி வேலூருக்கு தண்ணீர் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர், அதிமுக மாவட்டச் செயலாளர்போல செயல்படுகிறார். அவரது கார் மோதி இளைஞர் உயிரிழந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கை தோண்டி எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

திமுக ஆட்சியில் ஜப்பான் வங்கியிடம் கடன் பெற்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரூ.1,928 கோடியில் தொடங்கினோம். ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். இதை நான் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். உடனே, காணொளி காட்சி மூலம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனால், இன்னமும் 50 சதவீதம் மக்களுக்கு அங்கு குடிநீர் கிடைக்கவில்லை.

திமுக ஆட்சிக் கால திட்டங்களை அதிமுகவினர் நிறுத்துகின்றனர், முடக்குகின்றனர், ரத்து செய்கின்றனர். தலைமைச் செயலகம், ஆசியாவின் மிகப்பெரிய அண்ணா நூலகத்தை முடக்கி வைத்துள்ளனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதுவரை 1 லிட்டர் தண்ணீர்கூட யாருக்கும் இலவசமாக வழங்கவில்லை. ஆனால், அம்மா தண்ணீர் என விலைக்கு விற்கிறார்கள்’’ என்றார் ஸ்டாலின்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி (கிழக்கு), ஏ.பி.நந்தகுமார் (மத்திய மாவட்டம்), தேவராஜ் (மேற்கு), மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, மாநகர செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x