Published : 22 Apr 2015 10:38 AM
Last Updated : 22 Apr 2015 10:38 AM

முதியோர்களைப் பாதுகாக்கும் ‘டயல் 2’ சிஸ்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டம்

வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நீலாங்கரை போலீஸாரால் உருவாக்கப்பட்ட ‘டயல் 2’ சிஸ்டத்தை, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் வீட்டில் தனியாக இருக் கும் மூத்த குடிமக்கள் ஆதாயக் கொலை செய்யப்படுவது அவ்வப்போது நேரிடுகிறது. இதைத் தடுப்பதற்காக சென்னை நீலாங்கரை போலீஸார் ‘டயல் 2’ என்ற சிஸ்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, நீலாங்கரை போலீஸ் எல்லைக் குள் வீட்டில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் 110 பேர் பற்றிய விவரங்கள் அனைத்தும் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. இவர்களுக்கு ஏதாவது ஆபத்தோ, அசாதாரண சூழலோ, உடல்நலக் குறைவோ ஏற்பட்டால், தங்களது அலைபேசியில் எண் 2-ஐ அழுத்தி கால் செய்தால் போதும். உடனே போலீஸ் நிலை யத்துக்கு தகவல் கிடைத்து, அடுத்த 10 நிமிடத்துக்குள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸார் வந்துவிடுவர்.

உதாரணத்துக்கு, கொட்டிவாக்கத்தி லிருந்து ராமநாதன் என்பவர் அழைத்தால் ‘SC1KRA' என்று போலீஸ் நிலைய அலைபேசியின் காலர் ஐடியில் காட்டும். இதில் SC என்பது சீனியர் சிட்டிசனையும் K என்பது கொட்டிவாக்கத்தையும் RA என்பது ராமநாதனையும் குறிக்கிறது. ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் 1, 2 என எண்கள் கொடுக்கப்படும்.

கடந்த செப்டம்பரில் நீலாங்கரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சிஸ்டம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அண்மையில் சென்னையில் உள்ள 134 போலீஸ் நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த சிஸ்டத்தை உருவாக்கிய நீலாங் கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் எம்.எஸ். பாஸ்கரன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

‘‘வீட்டில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற் படுத்த வேண்டும் என கமிஷனர் எங்களுக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்துதான் ‘டயல் 2’ சிஸ்டத்தை உருவாக்கினோம்.

நீலாங்கரையை 3 கி.மீ.-க்கு ஒன்று வீதம் நான்கு செக்டார்களாக பிரித்தோம். ஒவ்வொரு செக்டாரிலும் 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து வாகனம் சுற்றிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செக்டாரிலும் 60 இடங்களில் பாயிண்ட் புத்தகங்கள் இருக்கும். இதில் மூன்று வேளையும் ரோந்து போலீஸார் கையெழுத்திடுவர்.

வீட்டில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளிலும் ஒரு பாயிண்ட் புத்தகம் இருக்கும். அங்கேயும் மூன்று வேளை யும் போலீஸ் விசிட் அடித்து, அவர்களின் நலன் குறித்தும் அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் விசாரிப்பார்கள்.

மருந்துகள் ஏதும் தேவைப்பட்டாலும் போலீஸாரிடம் சொன்னால் அவர்கள் டோர் டெலிவரி கொடுக்க வைத்துவிடுவார்கள். மூன்று வேளையும் மூத்த குடிமக்கள் வீடுக ளுக்கு போலீஸார் போய் வருவதால் அந்த வீடுகளுக்கு வரும் பணியாளர்கள் உட்பட யாரும் தப்பு செய்யத் துணியமாட்டார்கள். மூத்த குடிமக்களுக்கும் போலீஸ் நமக்கு பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்ற தெம்பும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

போலீஸ் அழைப்பு எண்கள் மட்டுமின்றி, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், மின் வாரியம், குழந்தைகள் மற்றும் பெண்கள் உதவி மையங் கள் உள்ளிட்ட எண்களையும் நீலாங்கரை எல்லைக்குட்பட்ட 1.10 லட்சம் பேருக்கும் பிரிண்ட் செய்து கொடுத்துள்ளோம். அவசர உதவிக்கு 95000 99100 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் அந்தத் தகவல் கமிஷனர் வரை போகும். உடனடியாக போலீஸ் அந்த இடத்துக்கு விரையும்’’ இவ்வாறு தெரிவித்தார் பாஸ்கர்.

சென்னை மாநகர் காவல் முழுமைக்கும் ‘டயல் 2’ சிஸ்டத்தின் கீழ், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் 10 ஆயிரம் பேரின் விவரங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், இந்த சிஸ்டம் நல்ல பலனை தந்திருப்பதால் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நீலாங்கரை போலீஸாரால் உருவாக்கப்பட்ட ‘டயல் 2’ சிஸ்டம் குறித்த விளக்கக் கூட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x