Published : 24 Apr 2015 09:15 AM
Last Updated : 24 Apr 2015 09:15 AM
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 கூலி தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி அனுப்பப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை முதன்மை செயலருக்கு தமிழக வனத் துறை இணைச் செயலர் பரிந்துரை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்ததாக ஏப். 7-ம் தேதி தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் அந்த மாநில அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இக்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் கே.மகாராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக உள்துறை முதன்மை செயலருக்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை செயலர் ஜி.லெட்சுமணமூர்த்தி பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் உள்துறை முதன்மை செயலருக்கு ஏப்ரல் 17-ல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பலர் மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பாரபட்சமற்ற, நியாயமான விசாரணை நடைபெறுவதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மனுக்களின் பொதுவான சாராம்சமாக உள்ளது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மனுதாரர்களுக்கு நேரடியாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல்கள் மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT