Published : 22 Apr 2015 08:58 AM
Last Updated : 22 Apr 2015 08:58 AM

பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல்: படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை

பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பிஎட், எம்எட் படிப்புகள் ஓராண்டு கால படிப்புகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வரும் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ஆசிரியர் படிப்பில் புதிய வழிகாட்டி விதிமுறைகளை கொண்டுவர உள்ளது.

2 ஆண்டுகளாக..

அதன்படி, பிஎட், எம்எட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கல்வியியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் சேர்க்கை விதிகளில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படுகின்றன.

இந்த நிலையில், என்சிடிஇ முடிவை எதிர்த்து தமிழ்நாட்டில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, என்சிடிஇ அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 75 சதவீத பணிகள் முடிந்துவிட்டன.

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கல்வி தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பேசிய என்சிடிஇ தலைவர் சந்தோஷ் பாண்டா, “ஆசிரியர் கல்வி தொடர்பான புதிய வழிகாட்டி விதிமுறைகள் வரும் ஜூலை முதல் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

வழக்கமாக, பிஎட் படிப்புக்கான அட்மிஷன் நடைமுறைகள் பிப்ரவரி மாதமே இறுதிசெய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இறுதிசெய்யப்பட்டு கடந்த வாரம் உயர் கல்வித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

பிஎட் படிப்பு காலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு ஒப்புதல் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக, பிஎட் அட்மிஷன் தொடர்பான அறிவிப்பு ஜூன் மாதவாக்கில் வெளியாகும். தற்போது வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், இந்த ஆண்டு பிஎட் அட்மிஷன் தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x