Published : 10 May 2014 12:00 PM
Last Updated : 10 May 2014 12:00 PM
திருச்சி பள்ளியில் பயின்றுவந்த விழியிழந்த மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து பார்வைத் திறன் உள்ளவர்களின் விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைத்துள்ளனர்.
தமிழகத்தில் விழியிழந்த பெண்களுக்காக உள்ள ஒரே மேல்நிலைப் பள்ளி திருச்சி புத்தூரில் உள்ளது. இந்த பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய 26 மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத சாதனையை எட்டிப்பிடிக்கச் செய்துள்ளனர்.
இந்த பள்ளி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை விழியிழந்த பெண்களுக்காக இயங்கி வருகிறது.1990-ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு துவக்கப்பட்டு இந்த ஆண்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வெள்ளி விழா காணும் ஆண்டில் மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் சதமடித்து வெள்ளி விழா பரிசு வழங்கியுள்ளனர். இப்பள்ளி இத்துடன் 6 ஆண்டுகள் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாணவி முதலிடம்…
சராசரி மாணவர்களைப்போல் இல்லை விழியிழந்தவர்களின் நிலை. இவர்கள் தேர்வெழுத உதவியாளர் ஒருவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நியமிப்பார். உதவியாளருக்கு தேர்வுத் தாள் ஒன்றுக்கு மாற்றுத்திறனாளிகள் துறை ரூ.250 ஊதியமாக வழங்குகிறது. இந்த உதவியாளர் கேள்வித்தாளில் உள்ளதை படித்துச் சொல்ல அதற்கு விழியிழந்த மாணவி சொல்லும் பதிலை உதவியாளர் விடைத்தாளில் எழுத வேண்டும். பார்வையற்றவர் சொன்னதைத்தான் உதவியாளர் எழுதுகிறாரா? என்பதைக்கூட விழியிழந்த மாணவர்களால் அறிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க இந்த முறையில் தேர்வெழுதி திருச்சி விழியிழந்தோர் பள்ளியில் பயிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை வசிப்பிடமாகக் கொண்ட மாணவி மாரியம்மாள் 1,006 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இத்தனைக்கும் இந்த பள்ளியில் வரலாறு, புவியியல், பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அப்படியிருந்தும் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ள விழியிழந்த மாணவிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
992 மதிப்பெண்கள் எடுத்து லட்சுமி என்கிற மாணவி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். மாணவிகள் மாரியம்மாள், லட்சுமி ஆகியோருக்கு ஆசிரியை ஆகவேண்டுமென்று ஆசையாம். உயர்கல்வி பயின்று ஆசிரியை ஆகி இதே பள்ளியில் ஆசிரியையாக வந்து விழியிழந்த மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என இந்த மாணவிகள் சக ஆசிரியர்களிடம் தங்களது ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பள்ளியில் பணிபுரியும் 34 ஊழியர்களில் 14 பேர் விழியிழந்தவர்கள். இவர்கள் அனைவருமே ஆசிரியர்களாக உள்ளனர். அதில் தனலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 2 ஆசிரியர்களும் இதே பள்ளியில் படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடத் தேர்வை பயின்று செய்முறை தேர்வுகளை செய்வது கடினம் என்பதால் படித்து தேர்வெழுதக்கூடிய பாடத்திட்டத்தைக் கொண்ட வகுப்புகள் மட்டுமே இப்பள்ளியில் இயங்கி வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியையான விஜய குமாரி கூறுகிறார்.
பார்வைக் குறைபாடு உடையவர்கள் கூடை, முறம் பின்னுதல், பத்தி, சாம்பிராணி தயாரித்து உடல் உழைப்பு தொழில் செய்துதான் பிழைக்க வேண்டுமென்றில்லை. படித்து ஆசிரியர்களாகவும் ஆக முடியும் என்கிறார்கள் இப்பள்ளியில் பயிலும் பார்வைத் திறன் இல்லாத மாணவிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT