Last Updated : 27 Apr, 2015 10:29 AM

 

Published : 27 Apr 2015 10:29 AM
Last Updated : 27 Apr 2015 10:29 AM

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கான்கிரீட் உருளை வீடு: கட்டிட மேஸ்திரி உருவாக்கியதை ஆய்வு செய்து அங்கீகரிக்க வேண்டுகோள்

கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள மேஸ்திரி ஒருவர், நில நடுக்கத்தால் பாதிப்படையாத உருளை வடிவிலான கான்கிரீட் வீடு ஒன்றை கட்டமைத்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பத்மநாபன் (56) ‘தி இந்து’விடம் கூறியதாவது:

செங்கல்லுக்கு பதிலாக, இரும்பு கம்பிகள், மணல், ஜல்லி, சிமென்ட் ஆகியவற்றின் மூலம் மோல்டிங் முறையில் அமைத்துள்ளேன். இந்த உருளை வீடு பூமியில் அடித்தளம் அமைக்கப்படாமல், தரையில் இருந்து 4 அடி வரை பள்ளம் வெட்டப்பட்டு அதில் அமைக்கப்பட்டுள்ளது.

உருளை வடிவத்தில் கம்பி களை உறுதியாக பிணைத்து, கம்பியின் இருபுறமும் மோல்டிங் வைத்து, ஜல்லி, மணல், சிமென்ட் கலவையை அதில் கொட்டி, சிறு இடைவெளிகூட ஏற்படாத வகையில் இயந்திரம் மூலம் வைப்ரேட் செய்யப்பட்டுள்ளது. உருளையின் அடிப்பாகத்திலிருந்து 4 அடி உயரத்தில் தரைதளம் அமைத் துள்ளேன். இதை 5 தூண்கள் தாங்கி நிற்பதால், தரைதளத்தின் மேற்பகுதி வழக்கமான குடியிருப்பு களில் உள்ளதுபோன்று காட்சி யளிக்கிறது.

கட்டிடத்துக்குள் அனைத்து விதமான அறைகளும் உள்ளன. கீழ்தளத்துக்கு செல்லவும் வழி உள்ளது. இந்த கட்டிடம் உருளை வடிவில் இருப்பதால், கட்டிடம் மேல் விழும் வெப்பம் அதில் தேங்காமல் பூமியை வந்தடைகிறது.

கட்டிடத்தின் உட்பகுதியில் உள்ள அறைக்கான தடுப்பு சுவர்களின் கம்பிகள் அனைத் தும், பக்கவாட்டு சுவர்களின் கம்பிகளுடன் இணைக்கப்பட்டுள் ளதால், எத்தகைய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது.

நிலநடுக்க காலங்களில் பக்கவாட்டு பகுதியில் அசைந்து கொடுக்குமே தவிர சரிந்து விழாது. இந்த வீட்டை தேவையான பகுதிக்கு நேராக தள்ளிச் செல்லலாம்.

படிப்பறிவு இல்லாத நான், சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் சேதத்தை தவிர்க்க 2009-ம் ஆண்டு இதை உருவாக்கினேன். இதை அறிந்து பல்வேறு தனியார் கட்டிட கலை நிபுணர்கள் பார்வையிட்டு சென்றனர்.

இந்த முயற்சியை அரசு ஆய்வு செய்து மற்ற பகுதி மக்களுக்கும் சென்றடைய வழிவகை காணவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x