Published : 22 Apr 2015 03:30 PM
Last Updated : 22 Apr 2015 03:30 PM

வேளாண் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்காதீர்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

வேளாண் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தென்மாவட்ட விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை வலுக்கட்டாயமாகப் பறிப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டுவந்த பாஜக அரசு, அடுத்த தாக்குதலை விவசாயிகள் மீது தொடுத்து இருக்கிறது.

வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் வேளாண்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7 விழுக்காட்டில் இருந்து 11 விழுக்காடாக உயர்த்துவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, விவசாயக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயிக்கின்றன. விவசாயக் கடன் தொகைக்கு இதுவரை 9 விழுக்காடு வட்டி வசூலிக்கப்பட்டது.

இதில் 2 விழுக்காட்டை மத்திய அரசு வங்கிகளுக்கு மானியமாக வழங்குகிறது. விவசாயிகளிடம் இருந்து 7 விழுக்காடு வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. விவசாயக் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும்போது, மேலும் 3 விழுக்காடு வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேளாண் கடன்களுக்கு 4 விழுக்காடு வட்டி செலுத்தி வருகின்றனர். தற்போது ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில், “வேளாண் கடன்களுக்கான வட்டி மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளதால் 11 விழுக்காடு வட்டியை விவசாயிகளிடம் வசூலிக்க வேண்டும்” என்று வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது.

விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்துப் பெறுகின்ற குறுகியகால பயிர்க் கடனுக்கான வட்டி விதிகமும் உயர்ந்து இருக்கின்றது. அது மட்டும் அன்றி, நகைக் கடன்களுக்குப் பதிலாக விவசாய சாகுபடி நிலங்களுக்கான சிட்டா அடங்கல் தாக்கல் செய்வதை வைத்து கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

வங்கிகளில் வழங்கும் வேளாண் கடனுக்கான வட்டி மானியத்திற்கு மத்திய அரசு நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், விவசாயிகள் மீது இந்தச் சுமையை வங்கிகள் மூலம் இறக்கி உள்ளது.

இயற்கை இடர்பாடுகளாலும், வேளாண் தொழிலில் ஏற்பட்டு வரும் நட்டத்தாலும் கடன் சுமை அதிகரித்து, விவசாயிகள் தற்கொலை செய்யத் தூண்டுகின்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்து உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளைக்விவசாயிகளுக்கு வங்கிகள் 4 விழுக்காடு வட்டியில் வேளாண் கடன் அளிப்பதற்கு மத்திய அரசு கைவிடுவதுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தென் மாவட்டங்களில் பெய்த பலத்த கோடை மழையாலும், சூறாவளியாலும் நெல், வாழை, வெற்றிலை மற்றும் முருங்கை போன்ற பயிர்கள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன.

இதனால் மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பயிர்ச் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது. தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களைப் பார்வையிட்டு, தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பு ஈட்டுத் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x