Published : 07 Apr 2015 10:41 AM
Last Updated : 07 Apr 2015 10:41 AM
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மனநிலையில் இருக் கும் கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கி சட்டப்பேரவைத் தேர் தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மத்தியில் பாஜகவும் மாநிலத் தில் அதிமுகவும் ஆட்சி செய்தன. மத்தியில் பாஜக அணியில் இடம் பெற்றிருந்த திமுக, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கூட்டணியில் இருந்து விலகியது. இதையடுத்து காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை உருவாக்கி, மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இப்போதும் அதேபோன்ற மெகா கூட்டணியை அமைத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, புதிய அணியை உருவாக்க திமுக தலைமை வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என அதிமுக வட்டாரங்களிலேயே பேச்சு நிலவுகிறது. இல்லாவிட்டாலும் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இதனால், தேர்தல் பணிகளை திமுக இப்போதே தொடங்கிவிட்டது. தேர்தல் நிதி வசூலுடன், கூட்டணி தொடர்பான வியூகங்களை வகுக்கவும் திமுக தலைமை தயாராகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாக்குகளை பெருமளவில் பிரித்ததே திமுகவுக்கு சரிவைத் தந்தது. எனவே, இம்முறை வாக்குகள் சிதறுவதைத் தடுக்க, முக்கிய கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
தேமுதிக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள், தமாகா என தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்துமே மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.
தேமுதிகவும் பாமகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பல விஷயங்களில் பாஜக அரசை பாமக வெளிப்படையாக விமர் சித்து வருகிறது. தேமுதிகவும் ஒதுங்கியே இருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக திமுகவுடன் இணைந்து போராடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல, கம்யூனிஸ்ட்களும் சமீபகாலமாக திமுக பற்றிய விமர்சனங்களை குறைத்துக் கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளை எல்லாம் தங்கள் பக்கம் கொண்டுவர திமுக தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
பாமகவைப் பொறுத்தவரை அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறி வித்துள்ள போதிலும், தேர்தல் நேரத்தில் ராமதாஸின் மன நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்று திமுக நம்புகிறது. தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தமாகா போன்ற கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே திமுகவின் திட்டமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT