Last Updated : 04 Apr, 2015 10:38 AM

 

Published : 04 Apr 2015 10:38 AM
Last Updated : 04 Apr 2015 10:38 AM

பிளாஸ்டிக் பைகளில் கூடுகட்டும் பறவைகள்: இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி

கெலவரப்பள்ளி அணையில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அங்கு நிலவும் சுகாதார சீர்கேட்டின் காரணமாக பறவைகள் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு கூடுகள் கட்டி யிருப்பது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி மாவட்டம் வழி யாக பாய்ந்தோடுகிறது. தமிழகத் தில் நுழையும் இடத்தில் ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டி தண்ணீர் தேக்கி வைக்கப் படுகிறது. 44 அடி உயரம் உள்ள இந்த அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டு வருகின்றன. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப் பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவிலான பறவைகள் இங்கு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அணையில் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. சில மாதங்கள் இங்கு தங்கியிருக்கும் பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு தனது சந்ததியினருடன் சொந்த இடங்களுக்குத் திரும்பும்.

பல வண்ணங்களில் பறந்து திரியும் வெளிநாட்டு பறவைகளைக் காண மக்கள் அதிக அளவில் அணைப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். பறவைகளை பார்க்கும்போது கண் களுக்கும், மனதுக்கும் பரவசமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், சமூகவிரோதிகளின் செயல்களால் வெளிநாட்டு பறவை களின் வருகை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக பறவைகள் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு கூடு கட்டுவதாகவும் இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஓசூரைச் சேர்ந்த பற வைகள் மற்றும் இயற்கை ஆர்வலர் வேணுகோபால் ராமச்சந்திரன் கூறியதாவது:

அணையில் தற்போது உள்நாட்டு பறவைகளுடன், மஞ்சள் சீருந்து, லிட்டில் நீர் மூழ்கும் பறவை, கஷ்கொட்டை, பிராமினி ஸ்டார் லிங், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட வெளி நாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. ஆனால், அணை நீர் முழுவதும் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்துள்ளதால், இரை தேடுவதில் பறவைகளுக்கு சிக்கல் உள்ளது.

தவிர, அணையைப் பார்க்க வரும் சமூகவிரோதிகள் மதுபாட்டில் கள், பிளாஸ்டிக் பைகள் ஆகிய வற்றை அணை மற்றும் பூங்கா பகுதிகளில் வீசிச் செல்கின்றனர். இதனால், சிறுசிறு குச்சிகள், நார், இலை, சருகுகள் மூலம் கூடுகட்டி வந்த பறவைகள் தற்போது பிளாஸ் டிக் பொருட்களை சேகரித்து மரக் கிளையில் கூடு கட்டும் அவலம் உள்ளது.

இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதற்கு இதுவே சிறந்த உதாரணம். சுற்றுச்சூழலை காக்கும் பறவைகளை நாம் பாதுகாக்காவிட்டாலும், அவற்றை பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இரையாக் காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அணைக்கு சுற்றுலாப் பயணி களின் வருகையை அதிகரிக்கும் வகையிலும், இங்கு வரும் வெளி நாட்டு பறவைகளை காக்கும் வகையிலும் அணையின் சூழலை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x