Published : 01 Mar 2014 09:30 AM
Last Updated : 01 Mar 2014 09:30 AM
விழுப்புரம் மாவட்டத்தில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் திடீரென அதிமுகவில் இணைந்ததால் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 25-ம் தேதி திருக்கோவிலூரில் வசிக்கும் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் தன்னுடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லால்குடி வெங்கடாசலம், பாளை அமரமூர்த்தி ஆகியோருடன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திடீரென சிவராஜ் அதிமுகவில் இணைய என்னதான் நடந்தது என விசாரித்தபோது...
ரிஷிவந்தியம் தொகுதியில் 1977, 1980 களில் சுந்தரமும், அவரைத் தொடர்ந்து அவருடைய உறவினர் சிவராஜ்1984, 1996, 2001, 2006 என நான்குமுறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். விஜயகாந்த் தவிர வேறு யாராவது நின்றிருந்தால் சிவராஜ்தான் இந்த முறையும் வெற்றிபெற்று இருப்பார்.
இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக சிவராஜின் மகன் பிரபு நியமிக்கப்பட்டார். பின்னர் ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும், வாசன் ஆதரவாளர்களுக்கும் நடந்த ஒரு பிரச்சினையில் பிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராக வழக்கறிஞர் இளையராஜாவை காங்கிரஸ் நியமித்தது. தனக்கான மரியாதை கட்சியில் இல்லை என்பதை உணர்ந்தாலும் சற்று பொறுமையாக இருக்கலாம் என சிவராஜ் நினைத்தார்.
ஆனால் தொழில் ரீதியாக பல நெருக்கடிகள் தொடர்ந்தவண்ணம் இருந்தது. “நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே. இங்கே இருந்து இருக்கும் செல்வாக்கையும் இழக்க வேண்டுமா” என சிவராஜின் நலன் விரும்பிகள் கூறியதால் எதார்த்தத்தை உணர்ந்து அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ளார்.
பின்னர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான நந்தகோபால் என்பவர் மூலம் கட்சியில் சேர அனுமதி பெற்று கடந்த 25-ம் தேதி சிவராஜ் அதிமுகவில் இணைந்தார். இதை அறிந்த வாசன் மிக அதிர்ச்சி அடைந்தாராம். அதைவிட விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள்தான் பெரிதும் அச்சம் அடைந்தனராம். மாவட்டச் செயலாளரான ஊரக தொழில்துறை அமைச்சர் மோகனுக்கு கடந்த 24-ம் தேதி மாலைதான் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
வசதியிலும், அரசியலிலும் சீனியரான சிவராஜ் மூலம் தங்களது பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் அதிமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அதிமுகவில் இணைந்த சிவராஜும் எந்த அதிமுக நிர்வாகிகளையும் சந்திக்கவில்லையாம். எந்த நிர்வாகியும் சிவராஜை வந்து சந்திக்கவில்லையாம்.
நேரடியாக தலைமையுடன் தொடர்பு கொண்டுள்ள சிவராஜ் மூலம், தங்களுடைய பதவிக்கு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT