Published : 23 Apr 2015 06:54 PM
Last Updated : 23 Apr 2015 06:54 PM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடந்தன. 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள், 42 ஆயிரம் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.85 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வு 2,377 மையங்களில் நடந்தது. எழுத்துத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி 5 முதல் 24-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தன. 3,298 மையங்களில் தேர்வுகள் நடந்தன. 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள், 50 ஆயிரத்து 429 தனித் தேர்வர்கள், சிறைவாசிகள் 240 பேர் உட்பட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நடந்து வரும் விடைத்தாள் திருத்தும் பணி, மே முதல் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்த பிறகு, மதிப்பெண்கள் குறுந்தகடு மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்படும். அதன்பிறகு பாட வாரியாக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.
இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகள், இணைய தளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள லாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT