Published : 19 May 2014 09:19 AM
Last Updated : 19 May 2014 09:19 AM
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக தோல்வி அடைந்த விரக்தியில் அந்தக் கட்சித் தொண்டர்கள் 5 பேர் ஞாயிற்றுக்கிழமை மொட்டை போட்டுக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 35 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். காந்திராஜன் 1,25,845 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளார். ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக சக்கரபாணி நீண்ட காலமாக உள்ளார். தவிர, திண்டுக்கல், பழனி தொகுதிகளில் திமுகவுக்கு செல்வாக்கு உண்டு.
எனவே, இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்து, திமுக எளிதாக வெற்றி பெறும் என்று திமுகவினர் கருதினர். அந்த நம்பிக்கையால் தேர்தல் நடக்கும் முன்பே திமுக வெற்றி பெற்றுவிட்டதாகவும், இப்போது நடக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் எல்லாம் திமுகவின் வெற்றி விழா கூட்டங்கள் என்றும் அந்தக் கட்சி நிர்வாகிகள் ஆரூடம் கூறி வந்தனர்.
ஆனால் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய 5 தொகுதிகளிலும் முதல் சுற்றிலிருந்தே திமுக பின்தங்கியது. சற்று ஆறுதலாக, ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் திமுக முன்னிலை பெற்றது.
இந்தத் தோல்வியை திமுக தொண்டர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் திண்டுக்கல் அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியின் திமுக செயலர் கிட்டு, கட்சித் தொண்டர்கள் மோகன், சரவணன், ராசப்பன், முருகேசன் ஆகிய 5 பேர் பழைய செம்பட்டியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலர் குலோத்துங்கன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மொட்டை போட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து சீவல்சரகு ஊராட்சி திமுக செயலர் கிட்டு கூறியது:
‘தேர்தலில் திமுகவின் படு தோல்வி எங்களை மிகவும் சோகத் தில் ஆழ்த்திவிட்டது. எங்கள் சோகத்தை வெளிக்காட்டுவதற் காக மொட்டை போட்டுள்ளோம். அதிமுகவைப்போல எளியவர்களும் பதவிக்கு வர திமுகவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். திமுகவைப் பலப்படுத்த கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT