Published : 21 Apr 2015 06:50 PM
Last Updated : 21 Apr 2015 06:50 PM
வறட்சிப் பகுதியை பசுமையாக மாற்றியதற்காகவும், அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் சிறந்த ஊராட்சியாகவும் ஆத்திப்பட்டி ஊராட்சி மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்து வருகிறது. இதற்காக அந்த ஊராட்சியில் மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.8 லட்சம் நிதி, ஊராட்சி தலைவருக்கு விருது, சான்றிதழ் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.
2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த ஊராட்சிகளாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஊராட்சி, திருப்பூர் மாவட்டத்தில் கொசவம்பாளையம் ஊராட்சி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்திப்பட்டி ஊராட்சி உள்ளிட்டவை மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஏப்.24-ல் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய ஊராட்சி தின விழாவில் ஊராட்சித் தலைவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுக்கு தேர்வான ஆத்திப்பட்டியில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.
புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி பெற விண்ணப்பிப்போர், வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி, கழிப்பறை வசதி செய்ய வேண்டும், இரு மரக்கன்றுகள் கட்டாயம் நட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
வறட்சிப் பகுதியான ஆத்திப்பட்டி ஊராட்சியில் தற்போது நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் புதிய யுக்திகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுகிறது.
இது குறித்து ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜன் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள சுமார் 3,500 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஒரே வாறுகால் வழியாகக் கொண்டு வந்து, அவை இரு இடங்களில் வடிகட்டப்படுகிறது. பின்னர், சுத்தமான, துர்நாற்றம் இல்லாத தண்ணீர் குளத்தில் நிரப்பப்படுகிறது. இவ்வாறு செய்வதால் குளத்தில் நீர் வற்றுவதில்லை. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது. இந்த குளத்தில் 15 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் தனி நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் தேவை என அரசு கூறுகிறது. எங்கள் ஊராட்சியில் தனி நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் வழங்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றியும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், மரங்கள் நட்டு வளர்க்கிறோம். வீடுகளில் கொசு வலைகள் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் 20 டன் குப்பைகளை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என்று தரம் பிரித்து அவற்றை அகற்றி வருகிறோம்.
மாநில அரசின் பரிந்து ரையின்பேரில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குழு 2 நாள்கள் தங்கி வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு சிறந்த ஊராட்சியாகத் தேர்வு செய்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT