Published : 15 Apr 2015 09:41 AM
Last Updated : 15 Apr 2015 09:41 AM
பருவமழை பொய்த்த நிலையில், வெயில் சுட்டெரிப்பதாலும், ஊற்று சுரக்காத நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாலும், காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால், போதிய குடிநீர் விநியோகிக்கக் கோரி தினமும் நகராட்சி அலுவலகத் தில் பொதுமக்கள் திரண்டு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆழ்துளை கிணறுகளிலும் ஊற்று குறைந்துள் ளதால், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நகராட்சித் தலைவர் மைதிலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் மொத்தம் 1.35 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர்த் தேவைக்காக நகராட்சி நிர்வாகம் பாலாறு மற்றும் திருப்பாற்கடல் ஆறுகள் மூலம் தினமும் 200 லட்சம் லிட்டர் தண்ணீரை குழாய்கள் மூலம் விநியோகித்தது.
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததாலும், ஆற்று மணல் சுரண்டல் காரணமாகவும் பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. இதனால், நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அன்றாட தேவை மற்றும் குடிநீருக்காக நகரப் பகுதி களில் 80-க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தண்ணீர் தேவை நிறைவு செய்யப் பட்டு வந்தது. ஆழ்துளைக் கிணறு களிலும் ஊற்று குறைந்து வருவதால், மீண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போதிய குடிநீர் விநியோகிக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் தினமும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘2 அல்லது 3 நாட் களுக்கு ஒருமுறை 2 மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. பெரும்பாலான பகுதி களில் லாரிகள் மூலம் வீட்டுக்கு 2 குடங்கள் வீதம் மட்டுமே தண்ணீர் வழங்குகின்றனர். இதனால், குடி நீர் உள்ளிட்ட தண்ணீர் தேவைக்கு அல்லல்பட்டு வருகிறோம்.
உள்ளாட்சித் தேர்தலின்போது பாலாற்று நீர் விநியோகிக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்ற அவர் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றனர்.
குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து நகராட்சிப் பொறியாளர் சுப்புராஜிடம் கேட்டபோது, ‘மக்கள் தொகை மற்றும் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலை யில் நகராட்சியின் தற்போதைய ஒரு நாள் குடிநீர் தேவை 220 லட்சம் லிட்டராக உள்ளது. ஆனால், தற்போது நகராட்சிக்கு கிடைப்பதோ 100 லட்சம் லிட்டர் தண்ணீர்தான்.
குடிநீர்த் தேவையை சமாளிக்க ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் 70-க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்கி வருகிறோம். மேலும், ஓரிக்கை, பிள்ளையார்பாளையம் ஆகிய பகுதிகளில் 15 ஆழ்துளை கிணறுகளின் மூலம் குடிநீர் பெற்று வருகிறோம். ஆனாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைவு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் ஊற்று இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
கோடைக்கால குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் ரூ. 1.33 கோடியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை பம்பு அமைக்க, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்’ என்றார் அவர்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் மைதிலி ‘தி இந்து’-விடம் கூறியதாவது:
பருவமழையின்றி பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்ப தால், நகராட்சிக்கு குடிநீர் வழங்கிய ஆழ்துளை கிணறுகளிலும் ஊற்று குறைந்துள்ளது. இதனால், திருப் பாற்கடல் ஆற்றில் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு நிலை மையை சமாளித்து வருகிறோம். மேலும், குடிநீர் தேவைக்காக நகரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள்அமைத்துள்ளோம். அவற்றிலும் குறைந்த அளவே தண்ணீர் சுரக்கிறது.
லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதற்காக கூடுத லாக 2 லாரிகள் வாங்கத் திட்ட மிட்டுள்ளோம். பருவமழையை நம்பியுள்ளோம். நிலைமை சீரடையும்வரை தற்போது கிடைக் கும் தண்ணீரை மக்கள் சிக்கன மாகப் பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT