Published : 23 Apr 2015 10:24 AM
Last Updated : 23 Apr 2015 10:24 AM

நூலகத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் கிராமத்து இளைஞர்கள்: வாடகை இடத்தில் மூட்டைகளில் 6 ஆயிரம் புத்தகங்கள்

வருங்கால சந்ததியினருக்காக சொத்து, பணம், பொருள் சேர்க்கும் ஆசையில் நிற்க நேரமில்லாமல் மக்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பழநி அருகே மூடப் படும் அபாயத்தில் இருக்கும் ஒரு நூலகத்தை தக்க வைக்க 2 ஆண்டுகளாக கிராமத்து இளைஞர்கள் போராடுகின்றனர்.

பழநி அருகே பழைய ஆயக்குடி பேரூராட்சியில் 35 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த ஊரில், 2007-ம் ஆண்டு முதல் 17 புரவலர்கள், 580 உறுப்பினர்களுடன் ஊர்ப்புற நூலகம் செயல்படுகிறது.

இந்த நூலகம், முதலில் புது ஆயக்குடி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் செயல்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம் சமுதாயக் கூடத்துக்கும், நூலகத்துக்கும் சேர்த்து இரண்டு மாடிக் கட்டிடம் கட்டித் தருவதாகக் கூறி, சில ஆண்டு களுக்கு முன் சமுதாயக் கூடத்தை இடித்தது. இதைத் தொடர்ந்து நூலகம் தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டது.

இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் நூலகக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நூலகத்துறை புது ஆயக் குடி ஊர்ப்புற நூலகத்தை மூடு வதற்கு நடவடிக்கை மேற்கொண் டது. இதையறிந்த ஊர், ‘மக் கள் மன்றம்’ இளைஞர்கள் நூல கக் கட்டிடத்துக்கு தங்கள் பணத் தில் வாடகை தருவதாக உறுதி அளித்தனர். அதனால், தற்காலிக மாக நூலகத்தை மூடும் திட்டத்தை நூலகத்துறை கைவிட்டது.

இதற்கிடையே 2 ஆண்டு களுக்கு முன் வாடகை கட்டுப் படியாகாததால் தனியார் கட்டிட உரிமையாளர் நூலகத்தைக் காலி செய்ய நெருக்கடி கொடுத்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தங்கள் கட்சி அலுவலகத்தில் நூலகம் செயல்பட அனுமதித்தனர். மக்கள் மன்ற இளைஞர்கள், பொதுமக்கள், தொடர்ந்து தங்கள் பணத்தில் நூலகத்துக்கு மின் கட்டணம் 230 ரூபாய், மாத வாடகை 500 ரூபாயை கொடுத்து வருகின்றனர்.

கட்சி அலுவலகம் மிகச் சிறிய தாக உள்ளதால், உறுப்பினர்கள் அமர்ந்து படிக்க வசதியாக இல்லை. நூலகத்தில் வைக்க இடமில்லாமல் 6 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகளில் கட்டி மூலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்துக்கு தினசரி 200-க்கும் மேற்பட்டோர் புத்தங்களை படிக்க வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து பழைய ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியிடம் கேட்டபோது, நூலகம் கட்ட எங்களிடம் இடம் இல்லை. வருவாய்த்துறையிடம் நிலம் உள்ளது. அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

வீட்டுவரி செலுத்தாப் போராட்டம்

பழைய ஆயக்குடி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த என். கமலகண்ணன் கூறும்போது, ‘‘நூலகம் கட்ட இடம் ஒதுக்கித் தரும்படி ஆயக்குடி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை நூலகத்துறை கடிதம் அனுப்பிவிட்டது. ஆனால், அதற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பொதுமக்களி டம் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வீட்டுவரியில் 10 சதவீதம் நூலக வரியாக நூலகத்துறைக்குச் செல்கிறது. அதனால் நூலகத்துக்கு இடம் ஒதுக்கும் வரை, வீட்டுவரியை செலுத்தக் கூடாது என முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x