Last Updated : 10 Apr, 2015 10:32 AM

 

Published : 10 Apr 2015 10:32 AM
Last Updated : 10 Apr 2015 10:32 AM

மதிப்புக் கூட்டு வரியை யார் செலுத்துவது? - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

தயாரிப்பாளரோ மொத்த வியாபாரியோ வரி செலுத்தவில்லை என்பதற்காக, ஒரு பொருளுக்கான முழு வரியையும் சில்லறை வியாபாரி அல்லது டீலர்தான் செலுத்த வேண்டும் என வற்புறுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்த ஒரு வர்த்தகமாக இருந்தாலும், விற்கப்படும் பொருளுக்கு மதிப்புக் கூட்டு வரி (வாட்) செலுத்த வேண்டும். பொருளை உற்பத்தி செய்பவர் அல்லது மொத்த வியாபாரி, பொருளை வாங்கி விற்கும் டீலர் ஆகியோர் இந்த வரியை செலுத்த வேண்டும்.

மொத்த வியாபாரியிடம் இருந்து பொருளை வாங்கும்போது டீலர் செலுத்துவது ‘இன்புட் வாட் டேக்ஸ்’ என்றும், அந்தப் பொரு ளுக்கு வாடிக்கையாளரிடம் இருந்து டீலர் வசூலிப்பது ‘அவுட்புட் வாட் டேக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. வாட் வரி, பொருளுக்கு பொருள் வேறுபடும்.

உதாரணத்துக்கு, மொத்த விற்பனையாளரிடம் இருந்து ரூ.1000 மதிப்புள்ள செல்போன் வாங்கும்போது, 5 சதவீதம் வரியை (ரூ.50) டீலர் செலுத்த வேண்டும். பின்னர் அந்த செல்போனை ரூ.100 லாபம் சேர்த்து, வாடிக் கையாளருக்கு ரூ.1,100-க்கு டீலர் விற்பார். அப்போது ரூ.1,100-க்கு 5 சதவீத வரியாக 55 ரூபாயை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். ஏற்கெனவே மொத்த வியாபாரியிடம் பொருள் வாங்கும்போது பில் மூலம் 50 ரூபாயை வரியாக செலுத்திவிட்டதால், மீதமுள்ள ரூ.5 மட்டும் வணிக வரிக்கு டீலர் செலுத்தினால் போதும்.

இப்படி வரியின் மீதத் தொகையை மட்டும் வணிக வரித் துறையில் செலுத்துவதற்கு 4 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, பதிவு பெற்ற டீலர்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். வணிக வரித்துறையில் மாதந்தோறும் விற்பனை வரி படிவம்-ஐ சமர்ப்பிப்பவராக இருத்தல் வேண்டும்.

தேவைப் படும்போது ‘பில்’களை (ஒரிஜினல் இன்வாய்ஸ்) அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ‘பில்’லில், யாரிடம் இருந்து பொருட்கள் வாங்கப்பட்டதோ அவரது பெயர், முகவரி மற்றும் ‘டின்’ நம்பர் (டேக்ஸ் ஐடென் டிபிகேஷன் நம்பர்) ஆகியன இருத்தல் அவசியம். இதுதான், மதிப்புக் கூட்டு வரி செலுத்தும் நடைமுறையாகும்.

இந்நிலையில், நுகர்வோர் பொருட்கள் மொத்த விற்பனை யாளரான ‘இன்பினிடி’ நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், வாட் வரியின் மீதத் தொகையை மட்டும் செலுத்தினால், அதை ஏற்க வணிக வரித்துறை மறுக்கிறது. மொத்த வியாபாரி வரியை செலுத்தாததால், அதையும் சேர்த்து எங்கள் நிறுவனமே முழு வரியையும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மொத்த வியாபாரி வரி செலுத்தவில்லை என்றால், அதை எங்களிடம் கேட்பது சரியல்ல. எனவே, வணிக வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரப் பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ‘‘தயாரிப்பாளர் அல்லது மொத்த வியாபாரி விற்பனை வரி செலுத்தவில்லை என்பதற்காக வரியின் மீதத் தொகையை மட்டும் டீலர் செலுத்து வதற்கு அனுமதி மறுக்கக் கூடாது. எனவே, முழு வரியையும் செலுத் தும்படி மனுதாரருக்கு வணிக வரித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து திருப்பூர் ஆடிட்டர் பாலாஜி கூறுகையில், ‘‘இந்த உத்தரவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மட்டுமே பொருந் தும். மற்றவர்கள் இந்த நிறுவனத் தைப் போன்ற பிரச்சினையை சந்தித்தால், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். வணிக வரித்துறையினர் செய்ய வேண்டிய வேலையை டீலர் தலை யில் சுமத்துவதை ஏற்க முடியாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x