Published : 23 Apr 2015 04:47 PM
Last Updated : 23 Apr 2015 04:47 PM
தூத்துக்குடி மீனவரின் மகன் கடற்கரை வாலிபால் போட்டியில் சாதித்து வருகிறார். ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தயாராகி வருகிறார்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த மீனவர் தொம்மை ராபர்ட் கென்னடி. இவரது மகன் கெவின்ஸ்டன்(15). தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். சிறு வயதில் இருந்தே வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட கெவின்ஸ்டன், கடந்த சில ஆண்டுகளாக கடற்கரை வாலிபால் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
சர்வதேச போட்டி
கடற்கரை வாலிபால் போட்டியில் மாவட்ட , மண்டல, கோட்ட , மாநில, தேசிய அளவில் என தொடர் சாதனைகளை படைத்த மாணவர் கெவின்ஸ்டன் தற்போது 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச கடற்கரை வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான அகில இந்திய கடற்கரை வாலிபால் போட்டி கடந்த ஜனவரி மாதம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணியில் கெவின்ஸ்டன் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த சபரீஷ் ஆகியோர் விளையாடினர். இறுதி போட்டியில் டெல்லியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
மூவரும் தமிழர்கள்
இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான தேர்வு நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணிக்கு மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 வீரர்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அகில இந்திய போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய தூத்துக்குடி மாணவர் கெவின்ஸ்டன், பொள்ளாச்சி மாணவர் சபரீஷ், நாகப்பட்டினத்தை சேர்ந்த மாணவர் மதிவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கடற்கரை வாலிபால் போட்டி ஜூன் 13 முதல் 30-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் உள்ள அரகாஜூ என்ற இடத்தில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி முகாம் ஜூன் மாதம் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச போட்டிக்காக தூத்துக்குடி கடற்கரையில் மாணவர் கெவின்ஸ்டன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
6-ம் வகுப்பிலிருந்து…
மாணவர் கெவின்ஸ்டன் கூறும்போது, ‘கடற்கரை வாலிபால் போட்டியை 6-ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே விளையாடி வருகிறேன். மாவட்ட, மண்டல , கோட்ட அளவில் நான் பங்கேற்ற அணி முதல் பரிசை வென்றுள்ளது. மாநில அளவிலான போட்டியில் எங்கள் அணி 4-வது இடத்தை தான் பிடித்தது.
இருப்பினும் மாநில தேர்வில் பங்கேற்று தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தற்போது இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பிரேசில் நாட்டில் ஜூன் 13 முதல் 20 வரை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கவுள்ளேன்.
பெற்றோர் ஊக்கம்
கடற்கரை வாலிபால் போட்டியில் நான் சாதிக்க பயிற்சியாளர் எஸ்.சேவியர், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், தலைமை ஆசிரியர் பெப்பின் ஆகியோர் அளித்த ஊக்கமே காரணம். பொருளாதார ரீதியிலும் உதவிகளை செய்தனர். எனது பெற்றோர் எல்லா வகையிலும் என்னை ஊக்கப்படுத்தினர்.
8-ம் வகுப்பு படிக்கும் போது எனது இணையாக செந்தில், 9-ம் வகுப்பில் ஜெட்லி, இந்த ஆண்டு விமல் ஆகியோர் விளையாடினர். அவர்களும் என்னை நன்றாக உற்சாகப்படுத்தினர். தினமும் காலை 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பயிற்சி செய்வேன். விளையாட்டின் எல்லா நுணுக்கங்களையும் பயிற்சியாளர் சேவியர் கற்றுத்தந்தார்.
அரசு உதவ வேண்டும்
சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்திய சீனியர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது தந்தை சாதாரண ஏழை மீனவர். எனவே, போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும் அரசு சார்பில் உதவிகள் செய்தால் நன்றாக இருக்கும்’ என்றார் அவர்.
பாராட்டு விழா!
சர்வதேச கடற்கரை வாலிபால் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர் கெவின்ஸ்டனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. முனுசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கணேசன், பள்ளி தாளாளர் அருட்சகோதரர் ராபர்ட், தலைமை ஆசிரியர் டி. பெப்பின், பயிற்சியாளர் எஸ். சேவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், தர்மர் ஆகியோர் மாணவரை பாராட்டி பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT