Published : 06 Apr 2015 06:42 PM
Last Updated : 06 Apr 2015 06:42 PM

பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை

தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்றால் தற்போதுள்ள பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘வளர்ந்த இந்தியாவும், இளைய சமுதாயமும்’ என்ற தலைப்பில் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அப்துல் கலாம் பேசியதாவது: ‘இந்தியா 2020’ என்ற திட்டம், நாட்டை நிலைநிறுத்த வழிவகை செய்யும் திட்டம். அப்படிச் செய்தால் வறுமையில் வாடும் 30 சதவீத மக்களை அதிலிருந்து விடுவித்து, விவசாயம் மற்றும் தொழில் துறை வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும்.

மத்திய, மாநில அரசுகள் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகின்றன. அதுமட்டும் போதாது. இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால், தேவையான தகுதித் திறனை வளர்த்துக் கொண்டால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான சமூகப் பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக, சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் எரிசக்தி சமமாகக் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் வெளிநாட்டு கம்பெனிகள், இங்கு 21 துறைகளில் தடம் பதிக்க உள்ளன. இந்த திட்டத்தில் இந்திய நிறுவனங்களும் தங்களது திறமை, தொழில்நுட்பம் வெளிப்படும் வகையில் முன்னோடிகளாக உருவாக வேண்டும்.

தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்து, புதிதாக தொழில் திறன், தொடர்பு திறன், பண்பாட்டு திறன், அறிவுத்திறன், உடல்நலம் மற்றும் மனநலன் மேம்பாடு போன்ற பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, கல்லூரி முடித்து வெளியேறும் மாணவர்களை, உலகத் தரச் சான்றிதழுடன் வேலைக்கு செல்லும் வகையிலும், தொழில் முனைவோராகவும் உருவாக்கிட வேண்டும்.

ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக உருவெடுத்துள்ளது. ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்ககூடிய சூழல் வரவேண்டும் என்றார்.

இதில், நிறுவனர் டாக்டர் சேதுராமன், கல்லூரி துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,

முன்னதாக பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை கலாம் வழங்கினார்.

இதையடுத்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலாம் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x