Last Updated : 08 Apr, 2015 09:29 AM

 

Published : 08 Apr 2015 09:29 AM
Last Updated : 08 Apr 2015 09:29 AM

பயனற்றுப்போன ஆலோசனைக் கூட்டம் - 4 திசையில் 4 எம்.பி.க்கள்: அதிருப்தியில் திமுக தலைமை

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் கனிமொழி மட்டுமே பங்கேற்றதால், கட்சித் தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்காத தங்கவேலு, கே.பி.ராமலிங்கம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மத்திய அரசின் செயல்பாடுகள், காவிரி பிரச்சினை, எம்.பி.க்கள் நிதியை செலவிடுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தனது கட்சி எம்.பி.க்களுடன் விவாதிக்க திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4-ம் தேதி காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் கூட் டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. திமுகவில் மக்களவை எம்.பி.க்கள் யாரும் இப்போது இல்லை. மாநிலங்களவையில் மட்டும் கனிமொழி, திருச்சி சிவா, தங்கவேலு, கே.பி.ராமலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 4 எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கனிமொழி மட்டுமே சரியான நேரத்தில் சென்றிருந்தார். மற்ற 3 பேரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருச்சி சிவாவிடம் கேட்டபோது, ‘‘அன்றைய தினம் எனக்கு வேறொரு கூட்டம் இருந்ததால் சென்று விட்டேன். இதுபற்றி முன்கூட்டியே தலைமைக்கு தகவல் தெரிவித் திருந்தேன். பின்னர் திமுக தலைவரையும், பொருளாளரையும் சந்தித்து நிலைமையை விளக்கினேன்’’ என்றார்.

இதற்கிடையே, கூட்டத்தில் பங் கேற்காததற்கு விளக்கம் கேட்டு தங்கவேலு மற்றும் கே.பி.ராமலிங்கத்துக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, ‘‘எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத 2 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். உடல் நிலை சரியில்லை என்று தங்கவேலு பதில் அனுப்பினார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். இதை பெரிதுப்படுத்தத் தேவையில்லை’’ என்றார்.

கே.பி.ராமலிங்கத்திடம் கேட்ட போது, ‘‘திமுக சார்பில் இப்படி யொரு ஆலோசனைக் கூட்டமே நடத்தப்படவே இல்லை. அதற்கான அழைப்பும் எனக்கு வரவில்லை. அதிகாரப்பூர்வமாக கூட்டம் நடத்தப் படாத சூழலில் எப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடியும். எனக்கு எந்த நோட்டீஸும் வர வில்லை’’ என்றார்.

திமுகவின் டெல்லி பிரதிநிதி களாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி.க்களும் 4 திசையில் நிற்பது, தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x