Published : 28 Apr 2015 08:16 AM
Last Updated : 28 Apr 2015 08:16 AM
சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. படுக்கையில் அமர்ந்தவாறே சுவர்களைப் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர் அக்குழந்தைகள். அருகில் சென்று பார்த்தால்தான் தெரிகிறது. கைகளையும், கால்களையும் அசைக்க முடியாமல் குப்புறக் கவிழ்ந்து படுத்திருக்கிறான் ஒரு சிறுவன். கட்டுப் போடப்பட்டிருந்த முழங்கையின் வலியைத் தாங்க முடியாமல் முனகிக் கொண்டே இருக்கிறாள் எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருத்தி. இம்மருத்துவமனையின் 'குழந்தைகள் முடநீக்கியல் பிரிவு', இது போன்ற நாட்டின் எதிர்காலங்களால் நிரம்பி வழிகிறது.
மருத்துவமனை தனியானதோர் உலகம். சந்தோஷங்களை மட்டுமே தங்கள் சின்னஞ்சிறு உலகில் தேக்கி வைத்திருக்கும் குழந்தைகள், அவர்களின் மருத்துவ சிகிச்சையை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? சிகிச்சைக்காக மாதக்கணக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் தங்கள் குழந்தைமையைத் தொலைக்க நேரிடுகிறதா?
குழந்தைப் பருவத்துக்கே உரித்தான அவர்களின் இயல்பான ஏக்கங்களைப் பூர்த்தி செய்திருக்கின்றது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் "புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் முடநீக்கியல் பிரிவு" முற்றிலும் புதிதாக இயங்கத் துவங்கி இருக்கிறது. 12 படுக்கைகள் கொண்ட இப்பிரிவின் பகுதியில் வினைல் அட்டைகளால் ஆன சுவர் ஓவியங்கள், கார்ட்டூன் சித்திரங்கள், மீன் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான தரத்தோடும், சுத்தத்தோடும் அரசு மருத்துவமனைகளும் இயங்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக பல குழந்தைகள் வந்திருக்கின்றனர். சத்துணவாக பாலும் முட்டையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. குழந்தையுடன் இருக்க ஒருவருக்கு அனுமதி உண்டு. அவருக்கும் மருத்துவமனையிலேயே உணவு தரப்படுகிறது.
இத்துறை, விளையாடும்போது ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்ட "விளையாட்டு சிகிச்சையகம்", திறந்த எலும்பு முறிவுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இப்புதிய முயற்சி குறித்து அத்துறையின் ஊழியர்களிடம் பேசினோம்.
''ஓடியாடித் திரியும் பருவத்தில், நகரமுடியாமல் ஒரே இடத்தில் இருப்பது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன செய்யலாம் என்று யோசித்து, அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் பாத்திரங்களையும், கார்ட்டூன் படங்களையும் வைத்தோம்.
அதோடு மீன் தொட்டியையும் சுவற்றோடு பொருத்தி இருக்கிறோம். இப்போது அவர்களின் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மனரீதியில் அவர்களை உற்சாகப்படுத்துவதோடு, காயங்கள் குணமாவதிலும் இது போன்ற விஷயங்கள் உதவிகரமாய் இருக்கின்றன. எதிர்காலத்தில் இப்பகுதியை விரிவுபடுத்தும் எண்ணமும் இருக்கிறது" என்றனர்.
வெளியே சிண்ட்ரெல்லா ஓவியம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ரோஜா தேவதை தங்களுக்கும் நல்லது செய்வாள் எனக் குழந்தைகள் ஆர்வமாய் அதையே பார்த்துக் காத்திருக்கின்றனர். இது போன்ற நல்லதோர் ஆரம்பங்கள் இன்னும் பல நம்பிக்கை சார்ந்த எதிர்பார்ப்புகளை பொதுமக்களிடையே ஊட்டுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT