Published : 13 Apr 2015 09:43 AM
Last Updated : 13 Apr 2015 09:43 AM

நலியும் தருவாயில் பகல் வேஷ கலை: குழுவாக நிகழ்த்தப்பட்டு தனி நபர் கலையாக குறுகியது

கிராமம், நகர்ப்புறங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரண்டு, மூன்று பேர் வேடமணிந்து, சுமார் பத்து நிமிடம் வரை உரத்த குரலில் பாடி ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை நடித்துக் காட்டும் கலைதான் ‘பகல் வேஷம்’ கலை. பகலில் வேஷம் கட்டி ஆடுவதால் ‘பகல் வேஷக்கலை’ எனப் பெயர் வந்துள்ளது. இந்தக் கலையில் ஒப்பனை, பாட்டு ஆகிய இரண்டும் முக்கியமாக கருதப்படுகிறது. இதை ரசிக்கும் மக்கள் தரும் பொருளுதவியே கலைஞர்களுக்கான வருவாய்.

விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில், ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த இக்கலை, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செல்வாக்குமிக்கதாக இருந்தது. பகல் வேஷமணிந்த கலைஞர்களின் காலை தொட்டு மக்கள் வணங்கும் அளவுக்கு மதிப்புடன் திகழ்ந்தனர். தற்போது டி.வி., செல்போன், திரைப்படங்களின் தாக்கத்தால் ‘பகல்வேஷம் கலை’ வரவேற்பை இழந்து அழியும் தருவாயில் உள்ளது.

இதுகுறித்து நாட்டுப்புறக் கலை ஞர்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும், திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் ஓ.முத்தையா கூறியதாவது: பகல் வேஷ கலைஞர்கள் நல்ல கதாபாத் திரங்களில் மட்டுமே நடிப்பார்கள். தர்மர், ராமர், அனுமார், சீதை, கண் ணன் உள்ளிட்ட தெய்வ கதாபாத் திரங்களை கண்முன் நிறுத்தும் அளவுக்கு தத்ரூபமாக வேடமணிந்து இயல்பாக நடித்துக் காட்டுவது இவர்களின் தனிச்சிறப்பு.

எந்த நாளில் எந்த வேஷம் போட வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. சனிக்கிழமை அனுமன் வேஷம், ஞாயிற்றுக்கிழமை ராமர் வேஷம், செவ்வாய்க்கிழமை கிருஷ்ணர் வேஷம் போடுவர். ஆனால் பெண் வேஷம் போடுவதில்லை.

இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். காணிக்கை தரும் வரை வீடு, பொது இடங்களில் ஆர்மோனியம் வாசித்து சுருதி யோடும் பாடுகின்றனர். இவர்களில் ஆண்கள் மட்டுமே வேஷம் கட்டுகின்றனர். பெண்கள் ஈடுபடுவதில்லை. ஒருவரின் வருமா னத்தைக் கொண்டே குடும்பம் நடத்துகின்றனர்.

ஒரு குழுவாக நிகழ்த்தப்பட்ட கலை, இன்று தனிநபர் கலையாக மாறி நலிந்துவிட்டது. ஊர் ஊராக இடம்பெயர்வதால் இவர்களது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப் படுகிறது. இன்னும் சாதிச் சான் றிதழ், ரேஷன் கார்டுகள் கிடைக்க வில்லை. அதனால் அரசின் சலுகை களும், திட்டங்களும் எட்டாமலேயே உள்ளது. இதனால் விளிம்பு நிலை மனிதர்களாகவே வாழ்நாளை கழிக்கின்றனர். இவர்களுக்கான உரிமைகள், சலுகைகளை அரசு வழங்க வேண்டும். இதன்மூலம் அழியும் நிகழ்த்துக் கலையை காக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்- பழநி சாலையில் வலம் வந்த கிருஷ்ணராக பகல்வேஷமணிந்த மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

‘எங்களுக்கு வேற தொழில் தெரியாது’

பகல்வேஷக் கலைஞர் ராமச்சந்திரன் கூறியதாவது: முன்பு திண்டுக்கல், தஞ்சை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவை, சிவகங்கை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக 5 ஆயிரம் குடும்பத்தினர் இருந்தோம். இப்போது 500 குடும்பம் மட்டுமே உள்ளது. மற்றவர்கள் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். நாள் முழுவதும் சுற்றினாலும் குறைந்த வருமானமே கிடைக்கும். அதைக்கொண்டு வாழமுடியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. இந்த கலையை பார்க்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு நிரந்தரக் குடியிருப்பு, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் நலமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x