Published : 23 Apr 2015 03:13 PM
Last Updated : 23 Apr 2015 03:13 PM

விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துக: ராமதாஸ்

விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் நேற்று நடத்திய விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டிற்கே உணவு படைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை உறுதி செய்ய முடியாதது இந்தியாவுக்கு பெரும் அவலமாகும். .

இந்தியாவின் சாபக்கேடு

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரசிங்கின் கதை மிகவும் சோகமானது. 3 குழந்தைகளின் தந்தையான அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நடப்பு பருவத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதால் இந்த துயரமான முடிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

விவசாயத்தில் இழப்பும், அதனால் ஏற்பட்ட சோகமும் கஜேந்திரசிங்குக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தியாவிலுள்ள விவசாயிகள் அனைவரிடமும் இதேபோன்ற சோகக்கதைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை அறிந்து விவசாயிகளின் கவலைகளை களைய ஆட்சியாளர்களுக்கு நேரமும், மனமும் இல்லாதது தான் விவசாயிகளை பெருமளவில் கொண்ட இந்தியாவின் சாபக்கேடு.

உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த எதிர்பாராத மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் 2.70 கோடி ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

இதனால் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். உத்தரப் பிரதேசம் தான் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் ரூ.1800 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இயற்கைச் சீற்றத்திற்கு தங்களின் பயிரையும், வாழ்க்கையையும் பறிகொடுத்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய எந்தஅரசும் முன்வரவில்லை. மாறாக உதவி என்ற பெயரில் அவர்களை அசிங்கப்படுத்துகின்றன.

இயற்கைச் சீற்றத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிருக்கான இழப்பீடு 50% உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும், இன்று வரை விவசாயிகளுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

மத்திய அரசு அறிவிக்கும் உதவியை விட இரு மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த உத்தரபிரதேச அரசு அதன்பின் செய்த செயல் தான் கொடுமையாகும். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.63, ரூ.78, ரூ.100, ரூ.112 என காசோலைகளை வழங்கியிருக்கிறது அம்மாநில அரசு. இதனால் அம்மாநில விவசாயிகள் கொதித்து போயிருக்கிறார்கள்.

ஒருபுறம் பயிர் சேதம், இன்னொரு புறம் வாங்கிய கடனை திரும்பத்தர முடியாத நிலை, இதற்கெல்லாம் மேலாக வட்டிக்கு கடன் தந்தவர்களின் தொல்லை என அனைத்து புறமும் நெருக்கடிகள் முற்றியதால் கடந்த 4 வாரங்களில் மட்டும் வட மாநிலங்களில் 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், இழப்பை தாங்க முடியாத அதிர்ச்சியிலும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதிகரித்து வரும் உழவர்கள் தற்கொலை

இந்தியாவில் தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே விவசாயிகள் தற்கொலை அதிகரித்து விட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பகுதியை உள்ளடக்கிய மராட்டிய மாநிலத்தில் மட்டும் 60,750 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 623 விவசாயிகள், 2012 ஆம் ஆண்டில் 499 பேர், 2013 ஆம் ஆண்டில் 105 பேர் என 3 ஆண்டுகளில் மொத்தம் 1227 பேர் உயிரை மாய்த்துள்ளனர். 2014 ஆம் ஆண்டை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1500-ஐ தாண்டும்.

விவசாயிகளின் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள் வேளாண் இடுபொருட்களின் விலைகள் அதிகரித்தது, விளைபொருட்கள் விலை உயராதது, இயற்கை சீற்றத்தால் பயிர்கள் அழிவது, மரபணு மாற்றப்பட்ட விதை போன்றவையாகும். இவற்றை சரி செய்தால் தான் விவசாயிகளை காக்க முடியும். ஆனால், அதை செய்யாத மத்திய, மாநில அரசுகள் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கின்றன.

வேளாண் விளைபொருட்களின் கொள்முதலை 3% மட்டும் அதிகரித்து விட்டு, பயிர்க்கடன் வட்டியை 11% ஆக உயர்த்தும் மத்திய அரசை விவசாயிகள் நலன் காக்கும் அரசாக எப்படி கருத முடியும்?

கஜேந்திர சிங்கின் தற்கொலை நாட்டையே உலுக்கியிருப்பதாகக் கூறி பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். இப்போதைய நிலையில் பிரதமரிடமிருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது இரங்கலோ, ஆறுதலோ இல்லை. விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தான்.

விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட 50% கூடுதல் கொள்முதல் விலை, மானிய விலையில் உரங்கள், வட்டியில்லாதக் கடன், வறட்சி & மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் சேதமடைந்தால் ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு உள்ளிட்டவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுதான் இறந்த விவசாயிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x