Last Updated : 23 May, 2014 01:09 PM

 

Published : 23 May 2014 01:09 PM
Last Updated : 23 May 2014 01:09 PM

10-ம் வகுப்பில் அரசு பள்ளி மாணவி பஹிரா பானு, 18 பேர் முதலிடம்

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில், சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்த தேர்ச்சி விகிதம் 85.87% ஆக உள்ளது. மாணவர்கள் 81.75% பேரும், மாணவிகள் 89.72% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவி பஹிரா பானு சாதனை

சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பஹிரா பானு, 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம்: பஹிரா

"மாநில அளவில் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றிக்கு என் பள்ளி ஆசிரியர்களே காரணம். அவர்கள் கடினமாக உழைத்தனர். சனி, ஞாயிறுகளில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்தினர். அவர்களது கற்பித்தல் முறையாலும், அர்ப்பணிப்பு பணியாலும்தான் இது சாத்தியமானது.

நான் இதே பள்ளியில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பேன். மருத்துவராக வேண்டும் என்பதே என் லட்சியம்" என்றார் பஹிரா பானு.

500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்த 321 பேரில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர் எஸ்.தனசேகர் இடம் பெற்றுள்ளார்.

இதேபோல், கரூர் மாவட்டம் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.சிவகார்த்திகா 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த 125 பேரில் ஒருவர் கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x