Published : 08 Apr 2015 10:22 AM
Last Updated : 08 Apr 2015 10:22 AM
முன்னெப்போதும் இல்லாத வகையில் குடமுழுக்கு விழாவுக்காக முழு அளவில் திருப்பணி கண்டு வருகிறது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.
பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மை தலமாகவும் போற்றப்படுகிறது ரங்கம் ரங்கநாதர் கோயில். ஆண்டு முழுவதும் விழா நடைபெறுவது ரங்கத்தின் சிறப்பாகும். தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்துச் செல்கின்றனர்.
இக்கோயிலில் இதற்கு முன் 15.03.2001-ல் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு இதற்கென அற நிலையத் துறை சார்பில் கடந்த ஆண்டில் ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 21 கோபுரங்கள், 29 கருவறை விமானங்கள், 40 உப சன்னதிகள் மற்றும் ஏராளமான மண்டபங்கள் உள்ளன. குடமுழுக்கு விழாவை யொட்டி கோயிலில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 29.06.2014-ல் கோபுரங்களுக்கு பாலாலயமும், 15.09.2014-ல் சன்னதிகள் பாலாலயமும் நடத்தப்பட்டு, திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தொல்லியல் அறிஞர் கே.டி.நரசிம்மன் மற்றும் அறநிலையத் துறை தலைமை ஸ்தபதி முத்தையா ஆகியோரின் ஆலோசனை யின்பேரில் அனைத்து திருப்பணி வேலைகளும் பழமை மாறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே கோபுரங்களில் இருந்த எனாமல் பெயின்ட் பூச்சுகள் அகற்றப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாட்டர் எமல்யூஷன் பெயின்ட் பூசப்பட்டுள்ளது.
கோயிலில் பல சன்னதிகளில் உள்ள மண்டபங்கள் பல்வேறு காலகட்டங்களில் மண்சுவர்களால் மூடப்பட்டிருந்தன. மேலும், பல இடங்களில் பல சன்னதிகளைச் சுற்றிலும் மண்கொட்டி மூடப்பட்டிருந் தது. நூற்றுக்கால் மண்டபங்கள், நிலவறை, நிறைய மண் மேடுகள் அனைத்தும் திருப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டு மண் அகற்றப் பட்டு கோயிலின் முழுப்பகுதியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பல சன்னதிகளில் உள்ள முன் மண்டபங்களில் உள்ள தூண் களுக்கு இடையே இருந்த மண் சுவர்கள் அகற்றப்பட்டு வெளிச்சம், காற்று ஆகியவற்றுக்காக தூண் களுக்கிடையே கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் அழகும், சிற்பங்கள் மற்றும் மண்டபங்களின் பொலிவும் சேதமடையாத வண்ணம் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலில் பல இடங்களில் இருந்த சிமென்ட் தளங்கள் அகற்றப்பட்டு, கருங்கல் தளம் போடப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே மதில் சுவர் சீரமைக்கப்பட்டு, கோயில் முழுவதும் ஒரே வண்ணம் பூசப்பட்டுள்ளது.
திருப்பணி வேலைகள் 75 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளன. தொடர்ந்து தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற பின்னரே குடமுழுக்கு விழாவுக்கான தேதி அறிவிக்கப்படும் என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு விழாக்களின்போது திருப்பணிகள் நடைபெற்றிருந் தாலும், தற்போதுதான் கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் முழு அளவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT