Published : 08 Apr 2015 09:55 PM
Last Updated : 08 Apr 2015 09:55 PM

ஆந்திர அரசைக் கண்டித்து ஏப்ரல் 10-ல் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: வைகோ

20 தமிழர்களை கோரமாக கொலை செய்த ஆந்திர மாநில அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, ஏப்ரல் 10-ல் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் நடக்காத கொடூரமாக 20 அப்பாவி கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர மாநிலக் காவல்துறையால் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கோரக் கொலைகள் ஆகும்.

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல் பேர்வழிகள், தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள ஏழைத் தொழிலாளர்களிடம், ‘நாங்கள் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி வாங்கி இருக்கின்றோம்’ என்று கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று, அற்பமான கூலியைக் கொடுத்து, அங்கே மரங்களை வெட்டுகின்ற வேலையில் ஈடுபடுத்தி வந்து உள்ளனர்.

பல நேரங்களில் தொழிலாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு, காக்கி நாடா, ராஜமுந்திரி, நெல்லூர் சிறைகளில் ஏராளமான தமிழர்கள் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டு வாடி வதங்குகின்றனர் என்ற உண்மையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போதைய சம்பவத்தில், 20 தமிழர்களும் 6 ஆம் தேதி மாலையிலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். எங்கோ ஒரு இடத்தில் அடைத்து வைத்து, அவர்கள் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியும், நெருப்பால் சுட்டும் சித்திரவதை செய்து உள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் நெருப்பு வைத்துக் கருக்கிய அடையாளங்கள் உள்ளன.

அரை நிர்வாணமாக உடல்கள் கிடக்கின்ற இடத்தில், செம்மரக் காடுகளே இல்லை. வெட்டவெளியாக இருக்கின்றது. ஆனால், உடல்களுக்கு அருகில் நன்கு செதுக்கப்பட்ட பழைய செம்மரக் கட்டைகளைப் போட்டு வைத்து உள்ளனர். அவர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று விட்டு, இந்தக் கோர நாடகத்தை நடத்தி உள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களில் தலை, நெற்றி, மார்பில்தான் குண்டுகள் பாய்ந்து உள்ளன. மிக அருகாமையில் இருந்துதான் சுட்டு இருக்கின்றார்கள்.கொலையான 20 பேர்களின் அலைபேசிகளும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி காவல்துறை அதிகாரியாக இருக்கின்ற டி.ஐ.ஜி. காந்தாராவ், ‘செம்மரக் காடுகளுக்குள் மரம் வெட்ட யார் வந்தாலும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லுவோம்’ என்று ஏற்கனவே மிரட்டி இருக்கின்றார்.

ஏழைத் தொழிலாளர்களை ஈவு இரக்கம் இன்றிக் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொன்ற காவல்துறையினரை வாழ்த்துகின்ற விதத்தில், ஆந்திர மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் பொலாஜா கோபாலகிருஷ்ண ரெட்டி, ‘கொள்ளையடிக்க வந்தால் சுடாமல் என்ன செய்வார்கள்?’ என்று திமிராகக் கூறி உள்ளார்.

செம்மரங்கள் வெட்டிக் கடத்துகின்ற வேலையில் இந்தத் தொழிலாளர்கள் ஈடுபடவில்லை; செம்மரக் கடத்தலில் ஈடுபடுகின்ற ஒப்பந்தக்காரன் அனுமதி இருப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்ததன் பேரில்தான் சென்று உள்ளார்கள். இவர்களுக்குச் செம்மரங்களைக் கடத்தவும் தெரியாது; அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கவும் தெரியாது.

கூலி வேலைக்குச் சென்று கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் தங்கள் குடும்பங்களை வாழ வைக்கும் இந்த ஏழைத் தமிழர்களைப் படுகொலை செய்த, காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது, ஆந்திர அரசாங்கத்தின் தலையாய கடமை ஆகும்.

ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை நடத்திய படுகொலையை ஆந்திர அரசு நியாயப்படுத்த முனைவது மனித உரிமைகளை நசுக்குகின்ற அக்கிரமம் ஆகும்.

எனவே, ஆந்திர மாநில அரசைக் கண்டித்தும், இப்படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக் கோரியும், நீதியை நிலைநாட்டுவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நேரடி நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், ஏப்ரல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, எனது தலைமையில் முற்றுகை அறப்போர் நடத்தப்படும்.

10-ம்தேதி காலை 10 மணிக்கு வேலூர் மாநகரில் இருந்து அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்கிறோம்'' என வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x